அரசியல் உறுதிப்பாட்டை ஏற்படுத்துவதை இலக்காகக்கொண்டே அரசியலமைப்பிற்கான 21 ஆவது திருத்தத்தை சமர்ப்பித்தோம்

247 0

தற்போது நாடு முகங்கொடுத்திருக்கும் பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வுகாண்பதற்கு அரசியல் உறுதிப்பாட்டை நிலைநாட்டுவது அவசியம் என்பதால், அதனை முன்னிறுத்தி அரசியலமைப்பிற்கான 21 ஆவது திருத்தச்சட்டமூலம் சமர்ப்பிக்கப்பட்டிருப்பதாகவும் ஐக்கிய தேசியக்கட்சியின் பிரதித்தலைவர் ருவன் விஜேவர்தன தெரிவித்துள்ளார். ;

அதுமாத்திரமன்றி பாராளுமன்றத்தை வலுப்படுத்துவதற்காக 15 குழுக்களை ஸ்தாபிப்பதற்கு பிரதமர் திட்டமிட்டிருப்பதாகவும், அந்தக் குழுக்களில் தற்போது போராட்டங்களில் ஈடுபட்டுவரும் இளைஞர், யுவதிகளையும் இணைத்துக்கொள்வதற்கு அவர் தயாராக இருப்பதாகவும் ருவன் விஜேவர்தன மேலும் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய தேசியக்கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் நேற்று செவ்வாய்கிழமை கட்சியின் செயற்பாட்டாளர்களைச் சந்தித்துக் கலந்துரையாடியபோதே ருவன் விஜேவர்தன மேற்கண்டவாறு தெரிவித்தார்
<p>அங்கு அவர் மேலும் கூறியதாவது,

பிரதமராகப் பதவியேற்றுக்கொள்வதை அனைத்துத் தரப்பினரும் நிராகரித்த சூழ்நிலையிலேயே எமது கட்சியின் தலைவர் பிரதமராகப் பதவியேற்றுக்கொண்டார். இந்தப் பொறுப்பை ஏற்றுக்கொள்வதற்கு அனைவரும் அஞ்சினார்கள். ஏனெனில் அக்காலப்பகுதியில் நாடு மிகமோசமான நெருக்கடிக்கு முகங்கொடுத்திருந்தது. அதன்காரணமாகவே வெளியே புலப்படாத அளவிற்கு நாட்டின் பொருளாதாரம் வெகுவாக வீழ்ச்சியடைந்து செல்வதாக பிரதமர் கூறினார்.

எரிபொருள், எரிவாயு உள்ளிட்ட அத்தியாவசியப்பொருட்களைப் பெற்றுக்கொள்வதற்கு மக்கள் நீண்ட வரிசைகளில் காத்திருந்த காலப்பகுதியிலேயே எமது கட்சியின் தலைவர் பிரதமர் பதவியைப் பொறுப்பேற்றுக்கொண்டார்.

பொருளாதார நெருக்கடியின் விளைவாக நாளாந்தம் பொதுமக்கள் நெருக்கடிகளுக்கு உள்ளாவதைத் தடுப்பதற்காகவே அவர் பிரதமராகப் பதவியேற்றார். அவர் தீப்பந்தமொன்றைக் கையிலெடுத்துக்கொண்டார் என்றே நான் கருதுகின்றேன். அந்தத் தீப்பந்தத்தை அணைத்தால் அவர் மாத்திரமன்றி, ஒட்டுமொத்த நாடு வெற்றியடையும்.
அதன்படி இப்போது பிரதமர் பொருளாதார நெருக்கடியைப் படிப்படியாகக் குறைத்துவருகின்றார் என்ற விடயத்தை அனைவரும் அறிந்திருக்கின்றார்கள். அத்தியாவசியப்பொருட்களுக்கான வரிசைகள் படிப்படியாகக் குறைக்கப்பட்டு வருகின்றன. எதுஎவ்வாறெனினும் எம்மால் இந்தப் போராட்டத்தில் தனியாக வெற்றியடைய முடியாது.

எனவே எமக்கு சர்வதேச சமூகத்தின் உதவிகள் இன்றியமையாதவையாகும். அதற்கு நாம் ஜனநாயகத்தைப் பாதுகாக்கின்ற நாடு என்ற விடயத்தை வெளிப்படுத்தும் வகையில் செயற்படவேண்டும்.

நாடளாவிய ரீதியில் வீதிகளில் இறங்கிப்போராடிய மக்கள் நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறைமையில் உள்ள மிதமிஞ்சிய அதிகாரங்களைக் குறைக்குமாறு வலியுறுத்திவருகின்றார்கள். குறிப்பாக அரசியலமைப்பிற்கான 20 ஆவது திருத்தத்தை நீக்கி, மீண்டும் 19 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துமாறு அவர்கள் கோருகின்றார்கள்
அதன்காரணமாக 19 ஆவது திருத்தத்தில் காணப்படும் குறைபாடுகளை நீக்கி, அரசியலமைப்பிற்கான 21 ஆவது திருத்தச்சட்டமூலத்தை சமர்ப்பிப்பதற்கு பிரதமர் நடவடிக்கை எடுத்திருக்கின்றார். நிதியமைச்சர் இதுகுறித்து நாட்டின் அனைத்துத்தரப்பினருக்கும் விளக்கமளித்துவருகின்றார்.

நாட்டின் பொதுநிதியை நிர்வகிக்கும் அதிகாரம் பாராளுமன்றத்திற்கே இருக்கின்றது. ஆனால் கடந்த காலத்தில் அந்த அதிகாரம் பாராளுமன்றத்தின்வசமிருந்து நழுவிச்சென்றது. அதனை மீண்டும் வலுப்படுத்தும் வகையில் நாம் 21 ஆவது திருத்தத்தை முன்வைத்திருக்கின்றோம். அதேவேளை பிரதமர் 5 பாராளுமன்ற செயற்குழுக்களை நியமிக்கவுள்ளார்.

அந்தக் குழுக்களுக்கு நாட்டின் இளைய சமுதாயத்தைத் தலைமைதாங்கச்செய்வதற்கான முயற்சிகளை பிரதமர் முன்னெடுத்துவருகின்றார். அதன்படி ஒவ்வொரு குழுக்களிலும் இளைய சமுதாயத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நால்வர் நியமிக்கப்படுவர் என்று தெரிவித்தார்.