மாதம் 2 பில்லியன் டொலர்களை கொண்டு வருகிறோம்: நாட்டை தாருங்கள்! விடுக்கப்பட்ட சவால்

195 0

தாம் ஆட்சிக்கு வந்தால் வெளிநாடுகளில் இருந்து ஒவ்வொரு மாதமும் 1.5 முதல் 2 பில்லியன் அமெரிக்க டொலர்களை கொண்டு வருவோம் என மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது.

மக்கள் விடுதலை முன்னணியின் பிரதம செயலாளர் ரில்வின் சில்வா நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதேவேளை, கட்சியின் வெளிநாட்டு அலுவலகங்கள் ஊடாக இந்த வேலைத்திட்டத்தை தம்மால் ஒருங்கிணைக்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் ஏற்பட்ட பொருளாதார தொடர்ந்து மகிந்த ராஜபக்ச தனது பிரதமர் பதவியை துறந்தார்.

இந்நிலையில், மகிந்தவின் பதவி விலகலை தொடர்ந்து ரணில் விக்ரமசிங்கவிடம் அரச தலைவர் பிரதமர் பதவி உட்பட நிதி அமைச்சு பொறுப்புக்களையும் ஒப்படைத்திருந்தார்.

பல நாடுகளுடன் நல் உறவை கொண்டுள்ள ரணில் நாட்டை நெருக்கடியில் இருந்து மீட்பார் என அரசியல்வாதிகள் உட்பட மக்கள் அனைவரும் எதிர்பார்த்தனர்.

இருப்பினும், பதவியேற்ற மூன்று வாரங்கள் கடந்தும் நெருக்கடிக்கு ரணிலால் நிலையான தீர்வொன்றை எட்ட முடியவில்லை. முன்னர் இருந்ததை விடு நெருக்கடி அதிகரித்து விட்டது என்றே கூறவேண்டும்.

இதேவேளை, அடுத்த 2 மாதங்களில் நெருக்கடி அதிகரிக்கும் எனவும் மக்கள் பல தியாகங்களை செய்ய வேண்டும் எனவும் ரணில் பகிரங்கமாக அறிவித்தமை மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

அத்தோடு, ரணில் அரசியலமைப்பு சீர்திருத்தங்களுக்கே முன்னுரிமை கொடுக்கின்றார் நெருக்கடியை தீர்க்க நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என அரசியல் ஆய்வாளர்கள் பலர் கருத்து வெளியிட்டு வருகின்றனர்.

நாடு நெருக்கடியின் உச்சத்தில் உள்ள நிலையில் மக்கள் விடுதலை முன்னணியின் இவ்வாறு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.