21 ஆவது திருத்த தனிநபர் சட்டமூலத்தை நிறைவேற்ற சர்வஜன வாக்கெடுப்பு அவசியம்

294 0

ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்றத்தில் முன்வைத்துள்ள நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறைமையை நீக்கக் கோரும் அரசியலமைப்பின் 21 ஆம் திருத்த சட்டமூலத்தை நிறைவேற்ற வேண்டுமாயின் அதற்கு சர்வஜன வாக்கெடுப்பு ஊடாக மக்களின் ஆணையை பெற்றுக்கொள்ள வேண்டும் என சட்டமாதிபர்  உயர் நீதிமன்றுக்கு அறிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர்  ரஞ்சித் மத்தும பண்டார மற்றும் அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ ஆகியோர் பாராளுமன்றிற்கு தனிநபர் பிரேரணையாக சமர்பிப்பித்துள்ள அரசியலமைப்பின் 21 மற்றும் 22ஆம்  திருத்தங்கள் தொடர்பான உத்தேச சட்டமூலத்தின் சில  பிரிவுகள் அரசியலமைப்பை மீறும் வகையில் அமைந்துள்ளதால் அவற்றை நிறைவேற்றிக்கொள்ள ; பாராளுமன்றின்  மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கு மேலதிகமாக சர்வஜன வாக்கெடுப்பும் அவசியம் என உத்தரவிட்டு வியாக்கியானம் அளிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் தொடர்பிலான விசாரணையின் போது இதனை சட்டமாதிபர் அறிவித்தார்.

சட்டமாதிபர் சார்பில் இம்மனுக்கள் தொடர்பில் ஆஜராகும் சொலிசிட்டர் ஜெனரல் இந்திகா தேமுனி டி சில்வா இதனை உயர்நீதிமன்றில் அறிவித்தார்.

இது தொடர்பில் சட்டமாதிபர் சபாநாயகருக்கும் அறிவித்துள்ளதாக அவர் நீதிமன்றின் கவனத்திற்கு கொண்டு வந்தார்.

மத்தும பண்டார மற்றும் விஜயதாஷ ராஜபக்ஷ ஆகியோரின் தனிநபர் பிரேரணைகளை சவாலுக்குட்படுத்தும் குறித்த மனுக்கள் நேற்று முன்தினமும், நேற்றும் பிரதம நீதியரசர் ஜனாதிபதி சட்டத்தரணி ஜயந்த ஜயசூரிய தலைமையிலான ஜனக் டி சில்வா,மற்றும் அர்ஜூன ஒபேசேகர ஆகியோர் உள்ளடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இவ்விசாரணைகளின் போது மனுவொன்றினை தாக்கல் செய்திருந்த கேர்னல் அனில் அமரசேகர சார்பில் மன்றில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி மனோகர டி சில்வா விசேட வாதங்களை முன்வைத்திருந்தார்

மனோகரடி சில்வாவின் வாதம்

தற்போதைய அரசியலமைப்பின் கீழ் நிறைவேற்று அதிகாரமானது பொது மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் ஜனாதிபதி ஒருவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

எனினும் உத்தேச திருத்த சட்டமூலம் ஊடாக ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரம் பிரதமர் வசமாகிறது. இது அபாயகரமான நிலைமையாகும்.

ஒருவேளை பொது மக்களால் தேர்ந்தெடுக்கபடாத  தேசிய பட்டியல் ஊடாக பாராளுமன்றிற்கு தெரிவு செய்யப்படும் உறுப்பினர் ஒருவர் பிரதமர் பதவிக்கு தெரிவு செய்யப்படுவாராயின் அவர் பொது மக்களின் இறையாண்மையை காக்கும் பிரதிநிதியாக விளங்கமாட்டார்.

அவ்வாறான நபரொருவருக்கு ஜனாதிபதிக்குரிய நிறைவேற்று அதிகாரங்களை வழங்குவது அரசியலமைப்பின் 3 ஆம் , 4 ஆம் ஆகிய உறுப்புரிமைகளை மீறும் நடவடிக்கையாகும்.

அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தம் ஊடாக ஸ்தாபிக்கப்பட்ட அரசியலமைப்பு பேரவை மற்றும் ஆணைக்குழுக்கள் ஊடாகவும் ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரம் அபகரிக்கப்பட்டுள்ளது.

அந்த திருத்தம் ஊடாக ஜனாதிபதி வெறுமனே இறப்பர் முத்திரையாக மாற்றப்பட்டுள்ளார். அமைச்சரவையை நியமித்தல், அமைச்சுக்களை தீர்மானித்தல் மற்றும் அதன் விடயதானங்கள் தொடர்பில் தீர்மானம் மேற்கொள்ளல் உள்ளிட்டவை இதுவரை ஜனாதிபதிக்குள்ள அதிகாரங்களாக காணப்படுகிறது.

எனினும் உத்தேச சட்டமூலம் ஊடாக அந்த அதிகாரம் ஜனாதிபதியிடமிருந்து முழுமையாக நீக்கப்படுகிறது என வாதங்களை முன்வைத்தார்.

இந்நிலையில் வழக்கு விசாரணைகள் இடையே மன்றில் மீண்டும் வாதங்களை முன்வைத்த சொலிசிட்டர் ஜெனரால் இந்திகா தே முனி டி சில்வா சமர்ப்பிக்கப்பட்ட உத்சே தனிநபர் திருத்த சட்ட மூலங்களில் அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஸவால் முன்வைக்கப்பட்ட பிரேரணை மீளப்பெறப்பட்டுள்ளதாக, அவரால் சபாநாயகருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக  நீதிமன்றின் கவனத்திற்கு கொண்டு வந்தார்.

இந்நிலையில் ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார முன்வைத்த ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரங்களை கட்டுப்படுத்தும் தனிநபர் சட்டமூலத்தை சவாலுக்குட்படுத்திய மனுக்கள் நேற்றும் விசாரணை செய்யப்பட்டு மேலதிக விசாரணைகள் எதிர்வரும் 30 ஆம் திகதி திங்கள் வரை ஒத்திவைக்கப்பட்டது.

;நாட்டுப்பற்றுக்கான தேசிய முன்னணி சார்பில்  அதன் மத்திய குழு  உருப்பினர் சட்டத்தரணி நுவன் பெல்லந்துடாவ, தேசிய அமைப்புக்கலின் ஒன்றியம் சார்பில் வைத்திய  குணதாச அமரசேகர, கேர்ணல் அமரசேகர  உள்ளிட்ட குழுவினர் சார்பில் இந்த விஷேட மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.