நாட்டின் பல பகுதிகளிலும் கடந்த 9 ஆம் திகதி இடம்பெற்ற வன்முறைகளின் போது சமூக வலைத்தளங்கள் ஊடாக வன்முறையைத் தூண்டும் வகையிலான பதிவுகளை பகிர்ந்த சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.
நாட்டின் பல பகுதிகளிலும் கடந்த 9 ஆம் திகதி இடம்பெற்ற வன்முறைகள் தொடர்பில் பொலிஸாரினால் தொடர்ந்தும் விசாரரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அதற்கமைய வன்முறைகள் இடம்பெற்ற இடங்களுக்கு நபர்களை அழைக்கும் செயற்பாடுகள் சமூக வலைத்தளங்களின் ஊடாகவே ஒருங்கிணைக்கப்பட்டமை தெரியவந்தது.
இது தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட மேலதிக விசாரணைகளில் சில சமூக வலைத்தள குழுக்கள் பொலிஸாரினால் அடையாளங் காணப்பட்டன.
இவற்றின் நிர்வாகிகள் (அட்மின்) கணனி குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதற்கமைய நேற்றுமுன்தினம் கம்பஹா – ஹரகம்தெனிய பிரதேசத்தைச் சேர்ந்த 20 வயதுடைய நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்
குறித்த நபர் அவரது முகநூல் ஊடாக வன்முறையைத் தூண்டும் வகையிலான பதிவுகளை பகிர்ந்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
அதற்கமையவே அவர்கள் கைது செய்யப்பட்டனர்
அவருக்கு எதிராக கணனி குற்றச்சட்டம், தண்டனை சட்டக் கோவை மற்றும் பொலிஸ் கட்டளைச் சட்டம் என்பவற்றின் கீழ் அவருக்கு எதிரான சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

