மருந்து தட்டுப்பாட்டிற்கு டொலர் நெருக்கடியே பிரதான காரணம்!

163 0

நாட்டுக்கு நன்கொடையாகக் கிடைக்கப்பெறும் மருந்துகளை விநியோகிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டினை மறுத்துள்ள தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபை , மருந்து தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளமைக்கு டொலர் நெருக்கடியே பிரதான காரணம் என்றும் அதற்கு தாம் பொறுப்பு கூற வேண்டியதில்லை என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.

பிரதமர் அலுவலகத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் புதன்கிழமை (25) நாட்டில் தற்போது நிலவும் மருந்து தட்டுப்பாடு தொடர்பில் இடம்பெற்ற கலந்துரையாடலில் தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபை மீது முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் தெளிவுபடுத்தி வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க , சுகாதாரத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல , துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, பாராளுமன்ற உறுப்பினர் நிமல் லன்சா, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான ருவான் விஜேவர்தன, தொழிற்சங்கவாதிகளான சமன் ரத்னப்பிரிய மற்றும் ரவி குமுதேஷ் உள்ளிட்ட பலரது பங்கேற்புடன் இடம்பெற்ற இந்த கலந்துரையாடலில் நாட்டில் தற்போது நிலவும் மருந்து தட்டுப்பாட்டுக்கு தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபை பொறுப்பு கூற வேண்டும் என்று குற்றஞ்சுமத்தப்பட்டது.

நாட்டில் நிலவும் எரிபொருள், சமையல் எரிவாயு, உணவு மற்றும் மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் தட்டுப்பாட்டில் தாக்கம் செலுத்தும் பிரதான காரணி டொலர் நெருக்கடியாகும். எனவே இவற்றுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாட்டுக்கு அவற்றை முகாமைத்துவம் செய்யும் நிறுவனங்கள் பொறுப்பாகாது என்பது தெளிவாகிறது.

மருந்து தட்டுப்பாட்டில் தாக்கம் செலுத்தும் பிரதான காரணியும் டொலர் நெருக்கடியே ஆகும். மருந்து தயாரிப்பிற்கான முலப்பொருட்கள் மற்றும் மருந்து இறக்குமதி செய்வதிலும் டொலர் தட்டுப்பாடே தாக்கம் செலுத்துகிறது. அதே போன்று மின்சாரம், வலுசக்தி, போக்குவரத்து உள்ளிட்ட சேவைகள் தொடர்ச்சியாகக் கிடைக்கப் பெறாமையின் காரணமாக மருந்து தொழிற்துறையும் பாதிக்கப்பட்டுள்ளது. மேற்கூறப்பட்ட காரணிகள் அனைத்தும் தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபையின் நிர்வாகத்திற்கு அப்பாற்பட்டவையாகும்

நாட்டில் நிலவும் நெருக்கடி நிலைமைகளுக்கு மத்தியில் மருந்து தட்டுப்பாடு ஏற்படுவதைத் தவிர்ப்பதற்காக தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபையின் வரையறையின் கீழ் எடுக்கப்பட வேண்டிய அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ள என்பதை பொறுப்புடன் தெரிவித்துக் கொள்கின்றோம்.</p>
<p>நாட்டுக்கு நன்கொடையாகக் கிடைக்கப் பெறும் மருந்துகளை விநியோகிப்பத்தில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக இதன் போது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. இவ்வாறு நன்கொடையாகக் கிடைக்கப் பெறும் மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களின் தரம் என்பன பரிசோதிக்கப்பட்டு , தாமதமின்றி அவற்றை விநியோகிப்பதற்கு பிரத்தியேகமான பிரிவொன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. அதன் ஊடாக மருந்து விநியோகம் எவ்வித தாமதமும் இன்றி முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

மருந்து மற்றும் மருத்துவ உபகரண தயாரிப்பு தொடர்பில் உள்நாட்டு உற்பத்தியாளர்கள் ஊக்குவிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டும் இதன் போது முன்வைக்கப்பட்டது. தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபையில் உள்நாட்டு உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கும் வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்கு பிரத்தியேக பிரிவொன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. இதன் கீழ் தயாரிக்கப்பட்ட 150 வகையான மருந்துகளின் தரம் உறுதிப்படுத்தப்பட்டு கடந்த 2 ஆம் திகதி பதிவு செய்யப்பட்டுள்ளன.

இது தவிர பாதுகாப்பானது என உறுதிப்படுத்தப்பட்ட 20 மருந்து உற்பத்தி நிறுவனங்கள் கடந்த இரு மாதங்களுக்குள் பரிசோதனைக்கான அனுமதியைப் பெற்றுள்ளன. அத்தோடு இவற்றில் மேலும் 4 புதிய மருந்து உற்பத்தி நிறுவனங்களும் உள்ளடங்குகின்றன.

நாட்டில் நிலவும் நெருக்கடி நிலைமைகளால் இதுவரையில் அனுமதி வழங்கப்படாத நிறுவனங்களுக்கு துரிதமாக அனுமதியை வழங்குவதற்கு விசேட நிபுணர்கள் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் நிலவும் நெருக்கடி நிலைமைகளுக்கு மத்தியிலும் தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபையினால் மருந்து தட்டுப்பாடு குறித்த நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்பதை தெரிவித்துக் கொள்கின்றோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.