யாழ். மீனவர்கள் போராட்டத்தில் குதித்தால் அடக்க முடியாது : யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் சங்கங்களின் சமாசங்களின் சம்மேளனம் எச்சரிக்கை

209 0

யாழ்ப்பாணம் கரையோரப் பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நாளை மண்ணெண்ணெய்யை பெற வசதி ஏற்படுத்த வேண்டும். அதை செயற்படுத்தத் தவறினால் சங்கங்கள் போராட்டத்தை ஆரம்பிக்கும். போராட்டங்களை ஆரம்பித்தால் அதனை அடக்க முடியாது என யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் சங்கங்களின் சமாசங்களின் சம்மேளன செயலாளர் நா. வர்ணகுலசிங்கம் தெரிவித்தார்.

யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் சங்கங்களின் சமாசங்களின் சம்மேளனத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த போதே இதனை தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,

மண்ணெண்ணெய் பல நாட்களாக வடக்கிற்கு வரவில்லை. தென்னிலங்கையில் சகல இடங்களுக்கும் எரிபொருள் விநியோகம் இடம்பெறுகின்றது.

வடபகுதிக்கு மாத்திரமே மண்ணெண்ணெயும் எரிபொருளும் தடைபட்டுள்ளது. இதற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை.

தமிழ் அரசியல்வாதிகளும் கண்ணை மூடிக்கொண்டு இருக்கின்றார்கள். இதனை நாம் பலதடவைகள் சுட்டிக் காட்டியுள்ளோம்.

இதனால் கடற்றொழிலாளர் சங்கங்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்த போவதாக கொந்தளித்துக் கொண்டு இருக்கின்றார்கள்.

நாளைக்கு மண்ணெண்ணெய் வரவில்லை என்றால் நீங்கள் என்னவென்றாலும் செய்யுங்கள் என்று நாங்கள் கூறியுள்ளோம். தமிழ் அரசியல்வாதிகளின் அலுவலகத்தையோ மாவட்ட செயலகத்தையோ ஆளுநர் அலுவலகத்தையோ அவர்கள் முற்றுகையிட தயாராகவுள்ளனர்.

நாங்கள் இதனை பொறுத்துக் கொண்டிருக்க முடியாது. கடற்றொழில் குடும்பங்கள் பட்டினிச் சாவை எதிர் கொண்டு உள்ளது. தயவு செய்து இது சம்பந்தமாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக கவனத்திலெடுத்து நாளைக்கு கரையோரப் பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மண்ணெண்ணெயை பெற வசதி ஏற்படுத்த வேண்டும்.

தவறினால் சங்கங்கள் போராட்டத்தை ஆரம்பிக்கும். ஆரம்பித்தால் அதனை அடக்க முடியாது. தயவு செய்து இதனை நாங்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகள“ கவனத்தில் கொண்டு கரையோரப் பிரதேசங்களுக்கு கடற்றொழிலாளர்களுக்கு மண்ணெண்ணெய் வழங்க வேண்டும் என்றார்.