உத்தேச 21 ஆவது திருத்த வரைபின் பிரகாரம் இரட்டை குடியுரிமையுடையவர் பாராளுமன்றில் உறுப்பினராக பதவி வகிக்க தகுதியற்றவர்

204 0

இரட்டை குடியுரிமையுடையவர் இலங்கை பாராளுமன்றில் உறுப்பினராக பதவி வகிக்க தகுதியற்றவர் என அரசியலமைப்பின் 21ஆவது திருத்தச் சட்டமூல வரைபின் 91 (1) (xiii) உப பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அரசியலமைப்பின் அரசியலமைப்பின் 21ஆவது திருத்த சட்டமூல வரைபில் 19 ஆவது திருத்தத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட ஆணைக்குழுக்கள் மீண்டும் சுயாதீனமாக செயற்படும் வகையிலான ஏற்பாடுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

நடைமுறையில் உள்ள அரசியலமைப்பின் 20ஆவது திருத்தத்தினால் நீக்கப்பட்ட தேசிய பெறுகை ஆணைக்குழு,கணக்காய்வு சேவை ஆணைக்குழு ஆகியவற்றை மீண்டும் செயற்படுத்தும் வகையிலும், அதிகாரம் மட்டுப்படுத்தப்பட்டுள்ள இலஞ்ச ஊழல் ஆணைக்குழு, அரச சேவை ஆணைக்குழு, தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு, பொலிஸ் ஆணைக்குழு ஆகிய பிரதான ஆணைக்குழுக்கள் சுயாதீனமான முறையில் செயற்படும் வகையில் 21ஆவது திருத்த சட்டமூலவரைபில் திருத்தங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையின் அதிகாரங்கள் சுயாதீன ஆணைக்குழுக்களுக்கும்,அரசியலமைப்பு சபைக்கும், மற்றும் அமைச்சரவைக்கும் பகிர்ந்தளிப்பதனால் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் அதிகாரங்கள் மட்டுப்படுத்தப்படும். அமைச்சரவை அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்கள் நியமனத்தின் போது ஜனாதிபதி பிரதமரின் ஆலோசனைகளை கட்டாயம் பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் 21ஆவது திருத்த வரைபில் குறிப்பிடப்பட்டுள்ளன. அத்துடன் மாகாண சபை முறைமை தொடர்பிலான எவ்வித திருத்தமும் 21ஆவது திருத்த வரைபில் உள்வாங்கப்படவில்லை.

அரசியலமைப்பு சபையினை மீள ஸ்தாபிப்பது குறித்து 21ஆவது திருத்தச்சட்ட வரைபில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.அரசியமைப்பு சபையின் உறுப்பினர்களாக பிரதமர்,சபாநாயகர்,எதிர்க்கட்சி தலைவர்,பிரதமர் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் ஆகிய இருவரும் ஒன்றினைந்து பெயர் குறிப்பிடும் ஐவரை சபையின் உறுப்பினர்களாக ஜனாதிபதி நியமிக்கப்பட வேண்டும்.

பெயர் குறிப்பிடப்படும் ஐவரில் இருவர் பாராளுமன்ற உறுப்பினர்களாக பதவி வகித்தலுடன்,ஏனைய மூவர் துறைசார் நிபுணர்களாக இருத்தலுடன்,நேர்மையானர்வர்களாகவும்,பிரபல்யமானவராக இருத்தலுடன் எக்கட்சிக்கும் ஆதரவற்றவராக காணப்பட வேண்டும்.அரசியலமைப்பு சபைக்கு நியமிக்கப்படும் ஐவரது பதவி காலம் 3 ஆண்டுகளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அரசியலமைப்பு சபையின் ஆலோசனைகளுக்கு அமையவே ஜனாதிபதி சுயாதீன ஆணைக்குழுக்களின் தலைவர்களையும்,ஆணைக்குழுக்களின் உறுப்பினர்களையும் நியமிக்க வேண்டும்.தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு, அரச சேவை ஆணைக்குழு,தேசிய பொலிஸ் ஆணைக்குழு, கணக்காய்வு சேவை ஆணைக்குழு,இலங்கை மனித உரிமை ஆணைக்குழு, இலஞ்ச ஊழல் ஒழிப்பு  ஆணைக்குழு,நிதி ஆணைக்குழு,எல்லை நிர்ணய ஆணைக்குழு,தேசிய பெறுகை ஆணைக்குழு,ஆகிய சுயாதீன ஆணைக்குழுக்களை ஸ்தாபிக்க 21ஆவது திருத்தம் பரிந்துரை செய்துள்ளது.

சட்டமாதிபர்,மத்திய வங்கியின் ஆளுநர்,கணக்காளர் நாயகம்,பொலிஸ்மா அதிபர்,குறைகேள் அதிகாரி மற்றும் பாராளுமன்ற செயலாளர் நாயகம் ஆகிய உயர் பதவிகளுக்கான நியமனத்தின் போது ஜனாதிபதி அரசியலமைப்பு சபையின் ஆலோசனைகளை கோர வேண்டும்.