ரணிலின் அரசாங்கத்துக்கு நீண்ட தூரம் பயணிக்க முடியாது – பைசர் முஸ்தபா

155 0

மக்களின் பிரச்சினைக்கு தீர்வுகாண சர்வகட்சி அரசாங்கம் அமைக்கப்படவேண்டும். பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் அரசாங்கத்துக்கு மக்கள ஆணை இல்லை.

அதனால் இந்த அரசாங்கத்துக்கு நீண்ட காலம் செல்ல முடியாது. மக்கள் ஆணை இல்லாத அரசாங்கத்துடன் சர்வதேச நாடுகளின் ஒத்துழைப்பு கிடைக்கப்போவதில்லை என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி கொழும்பு மாவட்ட அமைப்பாளரும் முன்னாள் அமைச்சருமான பைசல் முஸ்தபா தெரிவித்தார்.

கொழும்பில் புதன்கிழமை (25) இடம்பெற்ற தமிழ் ஊடகவியலாளர்களுடனான கலந்துரையாடலின் போதே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

பிரதமர் ரணில் விக்ரமசிங்க திறமையானவர். சர்வதேச தலைவர்களுடன் சிறந்த தொடர்புகளை வைத்திருப்பவர். அந்தவகையில் நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார பிரச்சினைக்கு தீர்வுகாண அவரால் பாரியதொரு பங்களிப்பை செய்ய முடியும் என்ற நம்பிக்கை அனைவருக்கும் இருக்கின்றது.

ஆனால் தற்போதுள்ள பிரச்சினைக்கு தீர்வுகாண சர்வகட்சி அரசாங்கம் அமைத்து அதற்கே ரணில் விக்ரமசிக்க பிரதமராக இருக்கவேண்டும். அவ்வாறானதொரு அரசாங்கம் அமைத்தாலே சர்வதேச நாடுகளுடன் கொடுக்கல் வாங்கல்களை செய்துகொள்ள முடியும்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு சர்வதேச நாடுகளுடன் சிறந்த தொடர்பு இருந்தாலும் அவர் ஒரு தனி மனிதர். நாடு என்றவகையில் சர்வதேசத்துடன் கலந்துரையாடும்போது, ஆளும் அரசாங்கத்துக்கு மக்கள் ஆணை இருக்கவேண்டும்.

ஆனால் ரணில் விக்ரமசிகவின் அரசாங்கத்துக்கு மக்கள் ஆணை இல்லை. பாராளுமன்றத்தில் இருக்கும் கட்சிகளின் உறுப்பினர்களை பிரித்தெடுத்துக்கொண்டு, அந்த கட்சிகளை பகைத்துக்கொண்டு இந்த அரசாங்கத்துக்கு நீண்ட தூரம் பயணிக்க முடியாது.

ஏனெனில் மக்களின் கோரிக்கை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ் வீட்டுக்கு செல்லவேண்டும் என்பதாகும். அவ்வாறு இருக்கும்போது கோத்தாபய ராஜபக்ஷ் தலைமையிலான இந்த அரசாங்கத்துக்கு மக்களின் ஆதரவு கிடைக்கப்போவதில்லை.

அதேபோன்று ராஜபக்ஷ் குடும்பத்துடன் தொடர்புபட்ட எவருக்கும் மக்கள் ஆதரவளிக்கப்போவதில்லை. அதனால் ஜனாதிபதி நாடு தொடர்பாக சிந்திப்பாராக இருந்தால், அவர் பதவி விலகுவதே நாட்டுக்கு செய்யும் பாரிய உதவி.</p>
<p>மேலும் அரசியலமைப்பின் 21ஆம் திருத்தத்துக்கு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி பூரண ஆதரவை வழங்குவோம். 20ஆம் திருத்தம் கொண்டுவந்தபோது, அன்றை அரசியல் நிலையை உணர்ந்து எமது கட்சி அதற்கு ஆதரவளித்திருந்தது. என்றாலும் அது பாரிய தவறாகும்.

இருந்தபோதும் 19ஆம் திருத்தத்தை கொண்டுவந்தவர் என்றவகையில் கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன 20க்கு ஆதரவளிக்கவில்லை.

நாடு பாரிய பொருளாதார, அரசியல் ரீதியில் வீழ்ச்சியடைய ஜனாதிபதியின் ஏகாதிபத்திய அதிகாரமே காரணமாகும். 20ஆம் திருத்தம் மூலமே ஜனாதிபதிக்கு அந்த அதிகாரம் கிடைத்தது.

அத்துடன் ரவூப் ஹக்கீம், ரிஷாத் பதியுதீனின் கட்சி உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் 20ஆம் திருத்தத்துக்கு ஆதரவளித்திருக்காவிட்டால், 20ஐ நிறைவேற்றிக்கொள்ள முடியாமல் போயிருக்கும்.

கட்சித் தலைவர்களின் அனுமதியுடனே 20க்கு ஆதரவளித்ததாக, ஆதரவாக வாக்களித்த பாராளுமன்ற உறுப்பினர்கள் பகிரங்கமாக தெரிவித்திருந்தனர்.

கட்சியின் தீர்மானத்தை மீறி ஆதரவளித்திருந்தால் அவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவேண்டும். அவ்வாறு எதுவும் இடம்பெறவில்லை.

எனவே 20ஆம் திருத்தம் மூலம் ஜனாதிபதிக்கு அதிகாரங்கள் குவிக்கப்பட்டபோதும்&nbsp; ஜனாதிபதியால் நாட்டை அபிவிருத்தி செய்ய முடியாமல் போயிருக்கின்றது.

அதனால் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ்வினால் முடியாது என மக்கள் உணர்ந்தே அவர் வீட்டுக்கு செல்லவேண்டும் என தற்போது மக்கள் தெரிவிக்கின்றனர்.

அத்துடன் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்துடன் ஆட்சிக்கு வந்து 2வருடங்களுக்கு முன்பே மக்களால் வெறுக்கப்பட்ட அரசாங்கமாக ராஜபக்ஷ அரசாங்கம் வரலாறு படைத்திருக்கின்றது.

உலகில் எந்தவொரு அரசாங்கமும் இந்தளவு குறுகிய காலத்தில் மக்களால் வெறுக்கப்படவில்லை. அதேபோன்று கோத்தாபய ராஜபக்ஷ் ஜனாதிபதியை போன்று உலகில் எந்த ஜனாதிபதியும் மக்களால் மிகவிரைவில் வெறுக்கப்படவில்லை என்றார்