இலங்கைக்கு தேவையான மருந்துகளை வழங்க சுகாதார அமைச்சுடன் இணைந்து பணியாற்றுவோம் – உலக சுகாதார ஸ்தாபனம்

133 0

மருந்து தட்டுப்பாட்டினால் ஏற்பட்டுள்ள சவாலை எதிர்கொள்வதற்கு உலக சுகாதார ஸ்தாபனம் இலங்கையுடன் இணைந்து செயற்படும்,

இலங்கைக்கு தேவையான மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரண உதவிகளை வழங்குவதற்கு சுகாதார அமைச்சுடன் இணைந்து பணியாற்றுவோம் என்று உலக சுகாதார ஸ்தாபனத்தின் பணிப்பாளர் நாயகம் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் தெரிவித்துள்ளார்.

நாட்டில் நிலவும் மருந்து மற்றும் மருத்துவ உபகரணங்களுக்கான தட்டுப்பாடு தொடர்பில் விசேட அறிவித்தலொன்றை விடுத்து இதனைத் தெரிவித்துள்ள அவர் அதில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது :

கடந்த இரண்டரை ஆண்டுகளாக நாம் உலகலாவிய ரீதியில் கொவிட் பெருந்தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்தோம். இதுவரையிலும் அது முடிவிற்கு வரவில்லை. இந்த நெருக்கடிகளுடன் இலங்கை பொருளாதார நெருக்கடிகளையும் தற்போது எதிர்கொண்டுள்ளது.

கடந்த சில மாதங்களாக இலங்கையின் நிலைவரம் தொடர்பில் அவதானித்து வருவதோடு, அது தொடர்பில் கரிசனை கொண்டுள்ளோம். உலக சுகாதார ஸ்தாபனம் இலங்கையின் சுகாதார அமைச்சுடன் தொடர்ந்தும் இணைந்து செயற்படும். மருந்துகள் , மருத்துவ உபகரணங்கள் மற்றும் அவசர தேவைகள் குறித்து முன்னுரிமையளித்து அவற்றைப் பெற்றுக் கொடுப்பதற்கான ஒத்துழைப்புக்கள் வழங்கப்படும்.

ஏனைய நாடுகளையும் இலங்கைக்கான நன்கொடைகளை தொடர்ச்சியாக வழங்குமாறு கேட்டுக் கொள்கின்றோம். இந்த நெருக்கடிக்கு மத்தியிலும் அர்ப்பணிப்புடன் சேவையாற்றி வரும் இலங்கையின் சுகாதார ஊழியர்கள் மதிப்பிற்குரியவர்கள். இலங்கைக்கான சுகாதார தேவையை உணர்ந்து ஒத்துழைப்புக்களை வழங்குவோம் என்று தெரிவித்துள்ளார்.