நாட்டுப்பற்றாளர்.திருமதி சிவகாமசுந்தரி தியாகராஜா. தமிழர் ஒருங்கிணைப்புக் குழு- யேர்மனி

281 0

நாட்டுப்பற்றாளர். திருமதி சிவகாமசுந்தரி தியாகராஜா
பிறப்பிடம்: ஆத்தியடி பருத்தித்துறை, தமிழீழம்.
வதிவிடம்: ஸ்வெபிஸ் ஹால் (Schwäbisch Hall-Germany)

மாந்தரின் வாழ்வியலில் மேன்மையாகக் கருதப்படுவது வாழ்வாங்கு வாழ்தலாகும். அதன் உண்மைநிலை யாதெனில் புவியில் பிறந்த ஒவ்வொருவரும் தமது வாழ்வை மண்ணின் உயர்விற்காகவும், பிறரின் மேன்மைக்காகவும் வாழ்தலேயாகும். அதிலும் பிறந்த மண்ணிற்காக தம்முயிரை ஈய்வது வானுறையும் தெய்வத்தின் நிலையாகும்.அத்தகைய பேறுடைய மக்களை பெற்று தாயகத்திற்காக ஈய்ந்த தியாகத்தாயை இழந்து நிற்கின்றோம்.

நாட்டுப்பற்றாளர்.திருமதி சிவகாமசுந்தரி தியாகராஜா அவர்கள், பிள்ளைகள் மாவீரர் கப்டன் மொறிஸ்,மாவீரர் கப்டன் மயூரன், மாவீரர் பிரேமராஜன் மாஸ்டர், பேரனான மாவீரர் லெப்டினன். பரதன் பிரேமராஜன், ஆகியோரின் தாயாராகவும், பேத்தியாராகவும் வாழ்ந்து, தேசவிடியலுக்காக தம்மை அர்ப்பணித்த பெருமாட்டியாவார். அத்தோடு தேசத்தில் வாழ்ந்த காலத்தில் வவுனியாவில் இராணுவக்கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில், இராணுவ நெருக்கடியின் மத்தியிலும், தேசவிரோத அணியினரின் முகாமிற்கு முன் வீட்டில் இருந்து கொண்டு, தமிழீழ புலனாய்வு போராளிகளை உபசரித்து இராணுவ முற்றுகைக்குள்ளும் உணவூட்டி பாதுகாத்த வீரத்தாயாவார்.

அத்துடன் தனது போர்க்கால அனுபவங்களின் நினைவுப்பதிவாக ‘பெருநினைவின் சிறுதுளிகள்’என்ற புத்தகத்தை எழுதி தனது எழுத்தாற்றல் மூலம் தேசப்பதிவை பதித்துள்ளார் . புலம்பெயர்ந்து ஜேர்மனிய நாட்டில் தஞ்சம் புகுந்த வேளையில் நம் சிறார்களுக்கு தாய்மொழிக் கல்வி அவசியம் என்பதை உணர்ந்து மன்கைம் தமிழாலயத்தில் ஆசிரியையாக பணியாற்றியதோடு,மன்கைம் நகரத்தில் பிரதிநிதியாவும் செயலாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். இத்தகைய தேசப்பற்று நிறைந்த உன்னதத் தாயை இழந்து வாடும் பிள்ளைகள்,உற்றார்,உறவினர்கள் அனைவருக்கும்,எமது ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதோடு உடல்,பொருள்,ஆவி அனைத்தையும் மண்ணிற்காய் ஆகுதியாக்கி விடைபெறும் எமது தாயவளின் ஆன்மா தேசவிடியலின் கதிர்களோடு சேர தமிழன்னையை வேண்டுகின்றோம்.

தேசவிடுதலையின் வேரில் ஆழ்ந்தோர் தேசவிடியலின் கதிரில் சேர்வர்

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.