ராஜபக்ஷ அரசாங்கத்தின் செயற்பாடுகளே பொருளாதார நெருக்கடி, கடன்களை மீளச்செலுத்தமுடியாத நிலைக்கு காரணம் – எரான்

181 0

நாட்டின் பொருளாதாரமும், பொதுநிதியும் மிக ஆபத்தான நிலையிலிருப்பதை கண்டறிந்த பின்னர் அதனைச் சீரமைப்பதற்கு நாம் முன்னெடுத்த நடவடிக்கைகள் அனைத்தும், 2019 நவம்பரில் ஆட்சிபீடமேறிய ராஜபக்ஷ அரசாங்கத்தின் செயற்பாடுகளால் பின்னடைவைச் சந்தித்தன.

அதன் விளைவாக இப்போது சர்வதேச கடன் தரப்படுத்தல் நிறுவனங்களால் கடன்களை மீளச்செலுத்தமுடியாத நாடாகத் தரமிறக்கப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம்.

இவ்வாறானதொரு பின்னணியில் முன்னைய வரி அறவீட்டு முறைமையை மீள நடைமுறைப்படுத்துதல் மற்றும் சர்வதேச நாணய நிதிய செயற்திட்டத்தின்கீழ் அவசியமான மறுசீரமைப்புக்களை மேற்கொள்ளுதல் ஆகியவற்றின் மூலம் பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வுகாண்பதை முன்னிறுத்தி பாராளுமன்றத்தின் ஊடாக முன்னெடுக்கப்படும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் தமது கட்சி ஆதரவு வழங்கும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.

நாடு கடன்களை மீளச்செலுத்தமுடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளமை தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே எரான் விக்ரமரத்ன மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

சர்வதேச பிணையங்கள் மற்றும் பரஸ்பர கடன்கள் உள்ளடங்கலாக வெளிநாட்டுக்கடன்களை மீளச்செலுத்துவதைக் கடந்த ஏப்ரல் மாதம் 12 ஆம் திகதி அரசாங்கம் இடைநிறுத்தியது.

கடந்த ஏப்ரல் 18 ஆம் திகதி மீளச்செலுத்தவேண்டிய சர்வதேச பிணையங்களுக்கான கொடுப்பனவைச் செலுத்துவதற்குரிய 30 நாட்கள் சலுகைக்காலம் முடிவடைந்திருக்கும் நிலையில், சர்வதேச கடன் தரப்படுத்தல் நிறுவனங்களான ஃபிட்ச் ரேட்டிங் மற்றும் ஸ்டான்ட் அன்ட் பூவர்ஸ் ஆகிய இரு நிறுவனங்களால் ‘வரையறுக்கப்பட்ட கடன்களை மீளச்செலுத்தமுடியாத நிலைக்குத்’ தரமிறக்கப்பட்டுள்ளது.

இது நாட்டின் வரலாற்றில் முதன்முறையாக வெளிநாட்டுக்கடன்களை மீளச்செலுத்தமுடியாத நிலைக்கு இலங்கை தள்ளப்பட்டிருப்பதைக் காண்பிக்கும் உத்தியோகபூர்வக் குறிகாட்டியாக அமைந்துள்ளது.

நாட்டின் பொருளாதாரமும், பொதுநிதியும் மிகவும் உயர்மட்டத்திலான ஆபத்தான நிலையிலிருப்பதை கடந்த அரசாங்கத்தில் நிதி இராஜாங்க அமைச்சராகப் பணியாற்றியபோது கண்டறிந்துகொண்டோம்.

அதன் விளைவாக சர்வதேச நாணய நிதியத்தின் தொழில்நுட்ப மற்றும் நிதியுதவியுடன் புதிய உள்நாட்டு வருமானச்சட்டம் எரிபொருள் விலைச்சூத்திரம், செயற்திறன்மிக்க பொறுப்பு (செலவினங்கள்) முகாமைத்துவச்சட்டம் மற்றும் கடன் முகாமைத்துவ நுட்பம் உள்ளடங்கலாக நாட்டின் நிலைவரத்தை மேம்படுத்தக்கூடியவாறான சில கொள்கை மறுசீரமைப்புக்களை மேற்கொண்டோம்.

அதிகளவிலான வெளிநாட்டுக்கடன்களை மீளச்செலுத்தவேண்டியிருந்த நிலையில் அவற்றுக்கான மீள்நிதியளிப்பிற்கும், வெளிநாட்டுக்கையிருப்பை சாதகமான நிலையில் பேணுவதற்கும், வெளிநாட்டுக்கடன்சுமையை சீரானமட்டத்தில் குறைப்பதற்கும் சர்வதேச நிதிச்சந்தையை நாடுவதற்கேற்றவாறான நிலையைப்பேணுவது அவசியம் என்பதை நாங்கள் புரிந்துகொண்டோம்.

அதன்படி அதிகளவான கடன் மீள்செலுத்துகைகள் மற்றும் தற்போது அரசாங்கத்தில் அங்கம்வகிப்போரால் நிகழ்த்தப்பட்ட அரசியலமைப்புச்சதியின் விளைவாக கடந்த 2019 ஆம் ஆண்டின் முற்பகுதியில் கடனாற்றல் அடிப்படையில் இலங்கை தரமிறக்கப்பட்டமை ஆகியவற்றுக்கு மத்தியிலும் 2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதமளவில் நாட்டின் மொத்த வெளிநாட்டுக்கையிருப்பு 7.5 பில்லியன் அமெரிக்க டொலர்களாகக் காணப்பட்டது.

இருப்பினும் தொடர்ந்து நிலவிய அரசியல் ஸ்திரமற்றதன்மையானது எஞ்சியிருந்த மறுசீரமைப்புக்களை மேற்கொள்வதற்கான எமது இயலுமை மட்டுப்படுத்தியது.

அரசநிதி மற்றும் கொள்கை மறுசீரமைப்பு ரீதியில் அடையப்பட்ட முன்னேற்றங்கள் கடந்த 2019 நவம்பர் மாதம் நடைபெற்ற ஜனாதிபதித்தேர்தலைத் தொடர்ந்து மிகக்குறுகிய காலத்திற்குள் பின்னடைவைச்சந்தித்தன.

குறிப்பாக பாரிய வரிவிலக்களிப்புக்களுடன் கூடிய ராஜபக்ஷ அரசாங்கத்தின் தவறான கொள்கைகள் மற்றும் நிர்வாகத்தின் விளைவாக நாட்டின் வருமானம் வெகுவாக வீழ்ச்சிகண்டது.

அதன் காரணமாக சர்வதேச நாணய நிதியத்தின் செயற்திட்டம் முழுமைப்படுத்தப்படாததுடன் கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியில் சர்வதேச கடன் தரப்படுத்தல் நிறுவனங்களால் நாட்டின் கடனாற்றல் தரமிறக்கப்பட்டதைத் தொடர்ந்து, இலங்கையால் சர்வதேச நிதிச்சந்தையை நாடமுடியாத நிலையேற்பட்டது.

இவ்வாறானதொரு சூழ்நிலையில் உரியவாறான கொள்கை மறுசீரமைப்புக்களை மேற்கொள்ளுமாறும் சர்வதேச நாணய நிதியத்துடன் மீண்டும் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்குமாறும் பல்வேறு தரப்பினர் தொடர்ச்சியாக வலியுறுத்திவந்த போதிலும், ராஜபக்ஷ அரசாங்கம் அதன் முறையற்ற நிர்வாகத்தையே தொடர்ந்து முன்னெடுத்தது.

இவ்வாறானதொரு பின்னணியில் பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வு காண்பதற்கும், சமூகத்திலுள்ள மிகவும் வலுக்குறைந்த தரப்பினரிடன் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கும் பாராளுமன்றத்தின் ஊடாக முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு ஆதரவு வழங்க ஐக்கிய மக்கள் சக்தி தயாராக இருக்கின்றது.

பொறுப்புவாய்ந்த எதிர்க்கட்சி என்ற அடிப்படையில் முன்னைய வரி அறவீட்டு முறைமையை மீள நடைமுறைப்படுத்துவதற்கும் சர்வதேச நாணய நிதிய செயற்திட்டத்தின்கீழ் அவசியமான மறுசீரமைப்புக்களை மேற்கொள்வதற்கும் ஐக்கிய மக்கள் சக்தி ஆதரவு வழங்கும்.

இதன்மூலம் கிடைக்கப்பெறும் நிதியை உணவு உள்ளிட்ட மக்களின் அத்தியாவசியத்தேவைகளைப் பூர்த்திசெய்வதற்குப் பயன்படுத்தமுடியும் என்று அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.