19ஆவது திருத்தச்சட்டத்தினை அடியொற்றியதாக 21ஆவது திருத்தச்சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் அது நாளையதினம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாகவும் நீதித்துறைரூபவ் சிறைச்சாலைகள் மற்றும் அரசியலமைப்பு சீர்திருத்த அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.
அமைச்சுப்பதிவயைப் பொறுப்பேற்றதன் பின்னர் வீரகேசரியிடம் 21ஆவது திருத்தச்சட்ட மூலம் உட்பட அடுத்தகட்டசெயற்படுகள் தொடர்பில் கருத்து வெளியிடும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாட்டில் பொருளாதார நெருக்கடிகள் தோற்றம்பெறவுள்ளதாக அறியப்பட்ட காலத்திலேயே அவ்விடயங்களை ஆழமாக கரிசனை கொள்ள வேண்டும் என்பதை வெளிப்படுத்தி வந்திருந்தேன்.
அதன்பின்னர் பொருளாதார நெருக்கடிகளால் அரசியல் ஸ்திரமற்ற நிலைமைகள் தோற்றம்பொற்ற நிலையில், தனிநபர் பிரேரணையாக 21ஆவது திருத்தச்சட்டத்தினை முன்மொழிந்திருந்தேன்.
அதில் பாராளுமன்றத்தினைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசியல் கட்சிகளும் பங்கேற்று தேசிய இடைக்கால அரசாங்கத்தினை ஸ்தாபிப்பதற்கான முன்மொழிவுகள் உள்ளிட்ட விடயங்கள் காணப்பட்டன.
அனால் எந்தவொரு அரசியல் தலைவரும் அதனை கருத்திற்கொள்ளவில்லை. இதனால் தான் வன்முறை நிலைமைகள் ஏற்பட்டுள்ளன. வன்முறைகள் இடம்பெற்றுவிடக் கூடாது என்பதற்காகவே நான் தனிநபர் பிரேரணையாக அதனைத் தயாரித்து சபாநாயகரிடத்தில் சமர்ப்பித்திருந்தேன்.
தற்போது அமைச்சுப்பொறுப்பினை ஏற்றுக்கொண்டுள்ளேன். இந்த நிலையில் அரசியலமைப்பில் திருத்தம் செய்வதற்கான நடவடிக்கைளை முன்னெடுக்கும் பொறுப்பு என்னித்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
அதற்கு அமைவாக, 19ஆவது திருத்தச்சட்டத்தினை அடியொற்றயதாவே புதிதாக தயாரிக்கப்பட்டுள்ள 21ஆவது திருத்தச்சட்டமூலம் காணப்படுகின்றது. அதில் ஜனாதிபதிக்கான நிறைவேற்று அதிகாரங்கள் குறைக்கப்படுகின்றன.
அத்துடன் மீண்டும் சுயாதீ ஆணைக்குழுக்கள் ஸ்தாபிக்கப்படவுள்ளன. அரசியலமைப்பு பேரவை மீளுருவாக்கப்படவுள்ளன. இவ்விதமான விடயங்களை அத்திருத்தம் உள்ளடக்கியுள்ளது.
இந்தச் சட்டமூலத்திற்கான வரைவுப் பணிகள் நேற்றையதினமே நிறைவுக்கு வந்துள்ள நிலையில் நாளையதினம் அமைச்சரவையில் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்துள்ளளேன். அவ்வாறு அமைச்சரவையின் அனுமதி பெறப்பட்டவுடன அடுத்து பாராளுமன்றத்திற்கு கொண்டு வரவப்படவுள்ளது என்றார்.

