10,200 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.13.75 கோடியில் ஸ்மார்ட்போன் – தமிழக அரசு சார்பில் டெண்டர்

169 0

மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்குவதற்காக ரூ.13.75 கோடியில் 10 ஆயிரம் ஸ்மார்ட்போன்களை கொள்முதல் செய்ய தமிழக அரசு சார்பில் டெண்டர் கோரப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் 13 லட்சத்துக்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் உள்ளனர். இவர்களில் 18 அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடைய, செவித்திறன், பார்வைத்திறன் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு தக்க செயலிகளுடன் கூடிய ஸ்மார்ட்போன் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், மாற்றுத் திறனாளிகளுக்கு இந்த ஆண்டு வழங்குவதற்காக ரூ.13.75 கோடியில் 10,200 ஸ்மார்ட்போன்களை கொள்முதல் செய்ய மாற்றுத் திறனாளிகள் நலத் துறை சார்பில் டெண்டர் கோரப்பட்டுள்ளது. டெண்டர் புள்ளிகளை தாக்கல் செய்ய ஜூன் 6-ம் தேதி கடைசி நாள். அன்று மாலை டெண்டர் இறுதிசெய்யப்படும்.

ஸ்மார்ட்போன்களை கொள்முதல் செய்த பிறகு, தேவைக்கேற்ப மாவட்டங்களுக்கு பிரித்து அனுப்பப்படும். இப்பணிகள் முடிந்ததும், மாற்றுத் திறனாளிகளுக்கு ஸ்மார்ட்போன் வழங்கப்படும் என்று மாற்றுத் திறனாளிகள் நலத்துறை அதிகாரிகள் கூறினர்.