அரசியலமைப்பிற்கான 21 ஆவது திருத்தம் மூலம் ஜனாதிபதியின் அதிகாரங்களைக் குறைப்பதே தனது பரிந்துரை – பிரதமர்

150 0

காலிமுகத்திடல் போராட்டக்காரர்கள், அரசியல் கட்சிகள் என்பன ஜனாதிபதி பதவி விலகவேண்டும் என்று வலியுறுத்துகின்ற போதிலும், ஜனாதிபதியின் பதவி விலகல் குறித்து சட்டத்தரணிகள் சங்கம் எதனையும் கூறவில்லை.

எனவே அரசியலமைப்பிற்கான 21 ஆவது திருத்தத்தின் ஊடாக ஜனாதிபதியின் அதிகாரங்களைக் குறைக்கவேண்டும் என்று தான் பரிந்துரைத்திருப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

பிரபல சர்வதேச ஊடகமொன்றுக்கு நிகழ்நிலையில் வழங்கிய நேர்காணலில் எழுப்பப்பட்ட கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

நாட்டின் தற்போதைய நிலைக்கு யார் காரணம் என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க, ‘நாட்டின் தற்போதைய நெருக்கடி நிலைக்கு கடந்த அரசாங்கமே காரணமாகும். இதற்கு முன்னெப்போதுமில்லாத வகையில் இப்போது எமது நாடு கடன்களை மீளச்செலுத்தமுடியாத முறிவடையும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. இப்போது எங்களிடம் டொலர்களோ ரூபாவோ இல்லை’ என்று தெரிவித்தார்.

இருப்பினும் அந்த அரசாங்கத்திற்கு இன்னும் உரியவாறான தண்டனை வழங்கப்படவில்லையே என்றும், இன்னமும் ஜனாதிபதி பதவி விலகவில்லையே என்றும் எழுப்பப்பட்ட கேள்விக்கு பிரதமர் பின்வருமாறு பதிலளித்தார்:

‘இது சர்ச்சைக்குரியதொரு விடயமாகும். காலிமுகத்திடலில் போராட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டிருப்பவர்களின் கோரிக்கை ஜனாதிபதி பதவி விலகவேண்டும் என்பதாகவே இருக்கின்றது. சில அரசியல் கட்சிகளும் இந்த விடயத்தையே வலியுறுத்துகின்றன. ஆனால் இலங்கை சட்டத்தரணிகள் சங்கமானது நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறைமை இல்லாதொழிக்கப்படவேண்டும் என்று வலியுறுத்தியிருக்கின்றதே தவிர, ஜனாதிபதி பதவி விலகுவது குறித்து எதனையும் குறிப்பிடவில்லை. எனவே இவ்விடயத்தில் மாறுபட்ட நிலைப்பாடுகள் காணப்படுகின்றன.

ஆகவே நான் ஒரு விடயத்தைப் பரிந்துரை செய்திருக்கின்றேன். அதன்படி அரசியலமைப்பிற்கான 21 ஆவது திருத்தம் நிறைவேற்றப்பட்டதன் பின்னர் 19 ஆவது திருத்தம் மீண்டும் அமுலுக்கு வருவதுடன், பாராளுமன்றம் மற்றும் பிரதமரின் அதிகாரங்கள் வலுப்படுத்தப்படும். அதன் பின்னர் ஜனாதிபதியும் அனைத்துக்கட்சிகளின் தலைவர்களும் ஒன்றிணைந்து கலந்துரையாடி எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் ஒரு இணக்கப்பாட்டிற்கு வரவேண்டும் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.