சீனா அதிநவீன நீண்டதூர ஏவுகணை சோதனை – அமெரிக்கா அதிர்ச்சி

284 0

10 அணுகுண்டுகளை சுமந்து சென்று தாக்குதல் நடத்தும் வல்லமைமிக்க நீண்ட தூர ஏவுகணை சோதனையை சீனா நடத்தியது. இது அமெரிக்காவை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

உலகிலேயே அதிகளவு மக்கள் தொகையைக் கொண்ட நாடு சீனா. இந்த நாடு தனது ராணுவ வல்லமையை பலப்படுத்தி வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் ராணுவத்துக்கான பட்ஜெட்டை சீனா அதிகரித்துக்கொண்டே போகிறது.

தனது ராணுவ தளவாடங்களை, ஆயுதங்களை பெருமளவில் சீனா உள்நாட்டிலேயே தயாரித்து வருகிறது.இந்த நிலையில், சீனா 10 அணுகுண்டுகளுடன் நீண்ட தூரத்துக்கு பறந்து சென்று எதிரியின் இலக்குகளை துவம்சம் செய்கிற ஆற்றல் வாய்ந்த ஏவுகணையை கடந்த சில தினங்களுக்கு முன் சோதித்து பார்த்துள்ளது.

இந்த ஏவுகணை, மத்திய சீனாவில் உள்ள தையுவான் விண்வெளி ஏவும் மையத்தில் இருந்து ஏவி பரிசோதிக்கப்பட்டுள்ளது. இந்த சோதனை வெற்றி பெற்றதா, இல்லையா என்பது குறித்த கூடுதல் விவரங்கள் வெளியிடப்படவில்லை.அதே நேரத்தில் இந்த சோதனை, அமெரிக்காவுக்கு அதிர்ச்சியைத் தந்துள்ளது.

இதுபற்றி அமெரிக்க ராணுவ தலைமையகம் பென்டகனின் செய்தி தொடர்பாளர் கேரி ரோஸ் கூறுகையில், “ சீனாவின் ராணுவ நடவடிக்கைகளை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்” என குறிப்பிட்டார்.

சீனா சோதித்துள்ள ஏவுகணையின் பெயர் டிஎப்-5சி ஆகும். இந்த ஏவுகணை சோதனை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. ஏனெனில், சீனா தனது ஆயுத தொகுப்பில் அணுகுண்டுகளின் எண்ணிக்கையை அதிகரித்துக்கொண்டே போவது இதன் மூலம் அம்பலத்துக்கு வந்துள்ளது.

சீனா தனது பழைய டிஎப்-5 ஏவுகணைகளுக்காக அணுகுண்டுகளை சேர்க்கத் தொடங்கி உள்ளது என அமெரிக்க உளவு அமைப்புகள் அந்த நாட்டு அரசிடம் தெரிவித்திருந்தன.

இப்போது 10 அணுகுண்டுகளை சுமந்து செல்லும் ஏவுகணை சோதனை நடத்தி இருப்பதன்மூலம், முதலில் கணிக்கப்பட்டிருந்தபடி சீனாவிடம் இருப்பது 250 அணுகுண்டுகள் அல்ல. அதை விட அதிக எண்ணிக்கையிலான அணுகுண்டுகள் என இப்போது தெரிய வந்துள்ளது.

அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் பதவி ஏற்றிருக்கிற நிலையில், இந்த ஏவுகணை சோதனை முக்கியத்துவம் பெற்றிருக்கிறது.இதுபற்றி சீன ராணுவ நிபுணர் ஒருவர் கூறும்போது, “டிரம்பை குறிவைத்து இந்த ஏவுகணை சோதனை நடத்தப்படவில்லை” என்று கூறினார்.

இப்படி ஒரு சோதனை நடத்துவதற்கு சீன மத்திய ராணுவ ஆணையத்தின் முன் அனுமதியை பெற வேண்டுமாம். இந்த அனுமதியை பெறுவதற்கு ஓராண்டு காலம் ஆகும். எனவே சீனா முன்கூட்டியே திட்டமிட்டு, தயாராகி இந்த ஏவுகணை சோதனையை நடத்தி உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.