தமிழகத்தில் 6 காலியிடங்களுக்கான மாநிலங்களவை தேர்தல் அட்டவணை வெளியீடு – மே 24-ல் வேட்புமனு தாக்கல் ஆரம்பம்

233 0

தமிழகத்தில் 6 மாநிலங்களவை உறுப்பினர்கள் தேர்தலுக்கான கால அட்டவணை நேற்று வெளியிடப்பட்டது.

இதுதொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ நேற்று வெளியிட்டசெய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் 6 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் ஜுன் 29-ம் தேதி முடிவடைகிறது. இந்த இடங்களை நிரப்புவதற்காக இந்திய தேர்தல் ஆணையம் தேர்தல் காலஅட்டவணையை வெளியிட்டுள்ளது. அதன்படி, தேர்தல் அறிவிக்கை மே 24-ம் தேதி வெளியிடப்பட்டு அன்று முதல் வேட்புமனு தாக்கல் ஆரம்பிக்கப்படும். வேட்புமனுக்களை தாக்கல் செய்ய கடைசி நாள் மே 31-ம் தேதி. வேட்புமனுக்கள் பரிசீலனை ஜுன் 1-ம் தேதி நடைபெறும். வேட்பு மனுக்களை திரும்பப் பெற்றுக்கொள்ள கடைசி நாள் ஜுன் 3-ம் தேதியாகும்.

தேர்தல் அதிகாரிகள் நியமனம்

வாக்குப்பதிவு ஜுன் 10-ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். வாக்கு எண்ணிக்கை அன்று மாலை 5 மணிக்கு தொடங்கும். தேர்தல் நடவடிக்கை ஜுன் 13-ம்தேதி முடிக்கப்படும். தமிழக சட்டப்பேரவை செயலாளரை தேர்தல் நடத்தும் அதிகாரியாகவும், பேரவை துணைச் செயலாளரை உதவி தேர்தல் நடத்தும் அதிகாரியாகவும் இந்திய தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது.

வேட்புமனுக்களை தேர்தல் நடத்தும் அதிகாரியிடமோ அல்லது உதவி தேர்தல் நடத்தும் அதிகாரியிடமோ மே 24 முதல் 31-ம் தேதி காலை 11 முதல் பிற்பகல் 3 மணி வரை (மே 28, 29 நீங்கலாக) தாக்கல் செய்யலாம். வாக்குப்பதிவு தேவைப்பட்டால் சட்டப்பேரவை குழுக்கள் அறையில் ஜுன் 10-ம் தேதி நடைபெறும்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.