சுதந்திர மூச்சுக்கே!அகரப்பாவலன்

48 0

பெரிய அண்டாக்களில்
கஞ்சி காச்சப்பட்டு
கொடுக்கப்படுகின்றது ..

மரித்தவர் நினைவுகளோடும்
மனதினில் துயரினோடும்
கொடுக்கப்படுகின்றது ..

முள்ளிவாய்க்காலில்
ஒருகுவளை கஞ்சிக்குத்தானே
வரிசையில் நின்றோம் ..

அதிலும் ..

முதியவரின் பசிக்கும்
குழந்தைகளின் பசிக்கும்
முதலிடம் கொடுத்தோம் ..
நாம் “தாயுமானவர்”
வழிகாட்டலில் வாழும்
இனமல்லவா!

நெஞ்சினில் கனத்த நினைவுகளுடன்
இன்று .. கஞ்சி ஊற்றுகின்றோம் ..
ஏன் .. சிங்களச் சிப்பாய்களுக்கும்
கஞ்சி ஊற்றுகின்றோம் ..

சுட்டுத்தள்ளியவர் ..
மூர்க்கம் கொண்டு
காலால் எட்டி உதைத்தவர்
மௌனித்து நிற்கின்றனர் ..
இது காலத்தின் கோலமா ?
நிலை மாற்றத்தின் கோலமா ?

இன்று ..

சிங்களம் உணவுக்கு
வரிசைகட்டி நிற்கின்றது ..
வெடிகொளுத்தி கொண்டாடி
புகழாரம் சூடிய ராஜபக்சேக்களை
“வீடு செல்” என்கிறது ..

அரசியல்வாதிகள்
சுயநலச் சக்ரவர்த்திகள் என்பதை
இன்னும் புரியாத மக்கள் ..
இனவெறித் தூண்டுதலே
அவர்களின் ..
சிம்மாசனத்தின் மூலவேர்
என்பதை புரியாத
உச்சாடனத்தில் உள்ளனர் ..

இவர்கள் !

எதையும் புரியப்போவதில்லை !
எதையும் உணரப்போவதுமில்லை !
இவர்கள் போராட்டம்
வாழ்வின் வளத்திற்கே !
எமது போராட்டம்
சுதந்திர மூச்சுக்கே .

-அகரப்பாவலன்-