காலிமுகத்திடல் தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையோருக்கு பயணத்தடை விதியுங்கள்

144 0

கொழும்பு, காலிமுகத்திடலில் அமைக்கப்பட்டுள்ள அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டுவந்தவர்கள்மீது நடத்தப்பட்ட தாக்குதல்களுடன் தொடர்புபட்டவர்களுக்கு பயணத்தடை விதிக்குமாறு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் பொலிஸாருக்குப் பரிந்துரை செய்யுள்ளது.

மக்கள் மத்தியில் நம்பிக்கையை உருவாக்குவதற்கும், அமைதியை நிலைநாட்டுவதற்கும் இவ்விடயத்தில் அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டியது அவசியம் என்று சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.

அலரிமாளிகையிலும் காலிமுகத்திடலிலும் வன்முறைத்தாக்குதல்களில் ஈடுபட்டவர்களைத் தூண்டியவர்கள் மற்றும் சதிசெய்தவர்கள் உள்ளிட்ட அனைவரையும் சட்டத்தின் பிரகாரம் உடனடியாகக் கைதுசெய்யவேண்டும் என்றும், இதன்போது அவர்கள் அரசாங்கத்தில் வகிக்கக்கூடிய பதவிகள் மற்றும் அவர்களது குடும்பத்தொடர்புகள் என்பவற்றின் அடிப்படையில் எவ்வித பாரபட்சமும் காண்பிக்கப்படக்கூடாது என்றும் சட்டத்தரணிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

அதுமாத்திரமன்றி அத்தகைய நபர்களுக்கு எதிராக பொலிஸார் பயணத்தடை உத்தரவைப் பெற்றுக்கொள்ளவேண்டும் என்று அச்சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும் அலரி மாளிகைக்கு முன்பாகவும் காலிமுகத்திடலிலும் அமைதியான முறையில் போராட்டங்களில் ஈடுபட்டவர்கள்மீது நிகழ்த்தப்பட்ட தாக்குதல்கள் தொடர்பில் உரியவாறான விசாரணைகள் முன்னெடுக்கப்படவேண்டும் என்று வலியுறுத்தியுள்ள சட்டத்தரணிகள் சங்கம், தனிநபர்களின் சொத்துக்க்ள மற்றும் பொதுச்சொத்துக்கள் மீது நிகழ்த்தப்படும் தாக்குதல்கள், ஏனைய வடிவங்களிலான வன்முறைகள் என்பவற்றை முடிவிற்குக்கொண்டுவருமாறும் கேட்டுக்கொண்டுள்ளது. அத்தோடு இவ்வாறான செயல்களுடன் தொடர்புடையவர்களும் விசாரணைக்குட்படுத்தப்பட்டு, கைதுசெய்யப்படவேண்டும் என்றும் சட்டத்தரணிகள் சங்க்ம வலியுறுத்தியுள்ளது.

பொலிஸார் உள்ளடங்கலாக குண்டர்களின் வன்முறைத்தாக்குதல்களைத் தடுப்பதற்குத் தவறிய அதிகாரிகள் தொடர்பிலும் சுதந்திரமான விசாரணைகள் முன்னெடுக்கப்படவேண்டும்’ என்றும் அச்சங்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.