சீனாவைப் பற்றி தவறான செய்தி பரப்ப, நிதி வழங்கியதா ஜப்பான்?

314 0

சீனாவைப் பற்றி தவறான தகவல்களை, பிரிட்டன் ஊடகங்கள் மூலமாக ஜப்பான் பரப்பி வந்ததாக செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவுக்கும், ஜப்பானுக்கும் தென் சீனக் கடல் விவகாரம் உள்ளிட்ட பல விஷயங்களில் பனிப்போர் நிகழ்ந்து வருகிறது. இதனால் இரு நாடுகளுக்கிடையே உள்ள உறவு எப்போதும் பதற்றமாகவே இருக்கும்.
தற்போது, ஜப்பான் நாடானது சீனாவின் அயல் நாட்டு தொழில் ஒப்பந்தங்களைக் குலைக்க முயன்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரிட்டன் – சீனா தொழில் ஒப்பந்தங்களை முறியடிக்க ஜப்பான் சதி வேலைகளை தீட்டியுள்ளதாக பிரிட்டனின் பிரபல பத்திரிகைகளில் ஒன்றான டைம்ஸ் பத்திரிகை குற்றம் சாட்டியுள்ளது.
பிரிட்டனில் 2005-ம் ஆண்டு தொடங்கப்பட்ட, ‘ஹென்றி ஜாக்சன் சொசைட்டி’ என்னும் தன்னார்வத் தொண்டு நிறுவனத்துக்கு லண்டனில் உள்ள ஜப்பான் தூதரகம் மாதாமாதம் 10 ஆயிரம் யூரோ பணம் வழங்கிக்கொண்டிருக்கிறது. இதன்மூலமாக பிரிட்டன் ஊடகங்கள் சிலவற்றை விலைக்கு வாங்கி, பிரிட்டன் – சீன ஒப்பந்தங்கள் பற்றியும், அதனை ஊக்குவிக்கும் அரசு அதிகாரிகளைப் பற்றியும் தவறான கருத்துகளைப் பரப்பி வருகிறது என டைம்ஸ் வெளியிட்ட செய்தி தெரிவிக்கிறது.
முக்கியமாக இங்கிலாந்து – சீனா இடையே போடப்பட்ட அணு உலை ஒப்பந்தங்களைப் பற்றிய தகவல்களை மக்களிடம் தவறாக எடுத்துச் சென்றதில் ஜப்பானின் பங்கு அதிகம் எனவும் செய்தி வெளியாகியுள்ளது.
இந்த செய்திகளால், ஏற்கனவே விரிசலில் உள்ள ஜப்பான் மற்றும் சீனா உறவில் மேலும் விரிசல் விழும் என எதிர்பார்க்கப்படுகின்றது.