ஹபீஸ் சயீத் வீட்டுக்காவலை எதிர்த்து வழக்கு – குடும்பத்தினர் அறிவிப்பு

308 0
 மும்பையில் 2008-ம் ஆண்டு நவம்பர் 26-ந்தேதி பாகிஸ்தான் பயங்கரவாதிகள் 10 பேர் நுழைந்து நடத்திய அதிபயங்கர தாக்குதல்களை, மூளையாக இருந்து செயல்படுத்தியவர் என்ற குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ளவர் ஹபீஸ் சயீத். லஷ்கர் இ தொய்பா இயக்கத்தை நிறுவியவர். தற்போது இவர் ஜமாத் உத் தவா என்ற பெயரில் ஒரு இயக்கத்தை நடத்தி வருகிறார்.

இவர் பாகிஸ்தான் கோர்ட்டில் நிலுவையில் உள்ள மும்பை தாக்குதல் வழக்கில் கைது செய்யப்பட்டு, பின்னர் 6 மாதத்திற்குள் லாகூர் ஐகோர்ட்டால் ஜாமீனில் விடுவிக்கப்பட்டது நினைவுகூரத்தக்கது.
இந்த நிலையில் ஹபீஸ் சயீத் நேற்று முன்தினம் இரவு அதிரடியாக வீட்டுக்காவலில் வைக்கப்பட்டார். அவரது கூட்டாளிகள் 4 பேரும் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர். பாகிஸ்தான் உள்துறை அமைச்சகத்தின் உத்தரவின்பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் அங்கு நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் ஜமாத் உத் தவா இயக்கத்தினர் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.பயங்கரவாதத்துக்கு எதிரான அமெரிக்கா மற்றும் சீனாவின் நிர்ப்பந்தம் காரணமாகவே ஹபீஸ் சயீத் மற்றும் அவரது இயக்கத்தினருக்கு எதிரான நடவடிக்கைகளை பாகிஸ்தான் அரசு முடுக்கி விட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், ஹபீஸ் சயீத் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டதை எதிர்த்து அவரது குடும்பத்தினர் கோர்ட்டில் வழக்கு தொடர நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிய வந்துள்ளது.இதுபற்றி அவரது மருமகன் கலீத் வாலீத் (ஹபீஸ் சயீத் மகளின் கணவர்) நேற்று ஆங்கில நாளிதழ் ஒன்றிடம் தொலைபேசி வழியாக பேசியபோது, “நாங்கள் கோர்ட்டுக்கு போவோம். கடந்த முறை அங்குதான் எங்களுக்கு நிவாரணம் கிடைத்தது” என குறிப்பிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.மேலும் அவர், தான் தற்போது தலைமறைவாகி விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.