பாராளுமன்ற சபை அமர்வு மே 17 வரை ஒத்திவைப்பு : சபாநாயகரின் அறைக்குள் சென்ற எதிர்கட்சியினரால் பரபரப்பு

276 0

பாராளுமன்ற கூட்டத்தொடர் எதிர்வரும் 17 ஆம் திகதி வரை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவினால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்றில் ஏற்பட்ட அமளிதுமளி காரணமாக 10 நிமிடங்களுக்கும் அதிகநேரம் இன்றைய சபை நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டன

பாராளுமன்றத்திற்கு பிரவேசிக்கும் வீதியினை மறித்து அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்திருந்தது.

இதையடுத்து மாணவர்கள் பொலிஸ் வீதித்தடையினை மீறி பாராளுமன்ற வளாகத்திற்குள் உட்செல்ல முற்பட்ட போது, அவர்கள் மீது பொலிஸார் நீர்த்தரை பிரயோகம் மற்றும் கண்ணீர்புகை பிரயோகம் மேற்கொண்டனர்.

இது தொடர்பில் எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்றைய சபை அமர்வில் சுட்டிக்காட்டியுடதுடன், உடனடியாக சபாநாயகரை சபை அமர்விற்கு அழைக்குமாறு கோரிக்கை விடுத்திருந்தனர்.

அத்துடன், நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பில் விவாதிப்பதற்கான காலத்தையும் உடனடியாக பெற்றுத்தருமாறு எதிர்க்கட்சியினர் கோரியிருந்தனர்.

இதனால் பாராளுமன்றில் அமைதியின்மை ஏற்பட்டிருந்த நிலையில், சபை நடவடிக்கைகளை 10 நிமிடங்களுக்கு ஒத்திவைப்பதாக சபைக்கு தலைமைத்தாங்கிய பாராளுமன்ற உறுப்பினர் ஹேசா விதானகே அறிவித்தார்

இதனையடுத்து சபை நடவடிக்கை மீண்டும் ஆரம்பமான போது, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன பங்கேற்றதுடன், எதிர்வரும் 17 ஆம் திகதி வரை பாராளுமன்ற சபை அமர்வுகளை ஒத்திவைப்பதாக அறிவித்தார்.

இதன்பின்னர், பாராளுமன்றத்திற்கு வெளியே போராட்டக்காரர்கள் மீது பொலிஸார் நடத்திய கண்ணீர்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகத் தாக்குதல் குறித்து முறைப்பாடு அளிக்க  எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் சபாநாயகரின் அறைக்கு சென்ற நிலையில் அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டது.

அத்தோடு நம்பிக்கையில்லாப் பிரேரணையை உடனடியாக பரிசீலனை செய்ய வேண்டும் எனவும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இதன்போது சபாநாயகரிடம் வலியுறுத்தியமை குறிப்பிடத்தக்கது.