இலஞ்சம், ஊழல் மற்றும் மோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள் தொடர்பான விசாரணைகளை முன்னெடுப்பதற்கு எமது நல்லாட்சி காலத்தின்போது பல்வேறு தடைகள் ஏற்பட்டதாக அப்போதைய சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சராகவிருந்த சாகல ரட்ணாயக்க தெரிவித்தார்.
சட்ட மா அதிபர் திணைக்களம், குற்றவியல் விசாரணை திணைக்களம், ; ;இலஞ்சம் மற்றும் ஊழல் மோசடி தடுப்பு திணைக்களம், ; நிதி மோசடி விசாரணைப் பிரிவு உள்ளிட்ட பல்வேறு பிரிவினருக்கு விசாரணைகளை முன்னெடுத்து செல்வதற்கு தடைகளும் அச்சுறுத்தல்களும் காணப்பட்டதாக மேலும் அவர் குறிப்பிட்டார்.
;ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் நேற்று (05) நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் கூறுகையில்,
“அரசாங்கத்தை சார்ந்தவர்கள் மற்றும் அரசாங்கத்தை சாராதவர்கள் ஊழல் மோசடிகளில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படும் பல்வேறுபட்ட தகவல்களை ஜே.வி.பி. யின் ஊழலுக்கு எதிரான குரல் அமைப்பினர் அண்மையில் ஊடக சந்திப்பொன்றின்போது வெளியிட்டிருந்தனர்.
2015/2019 ஆண்டு காலப் பகுதிகளில் ஆட்சி செய்த அரசாங்கத்தால், மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் மற்றும் தொடரப்பட்ட வழக்குகள் தொடர்பில் அங்கு பேசப்பட்டிருந்தது.
ஆகவே, அந்த அரசாங்கத்தில் நான் சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சராக இருந்ததால் அவை குறித்து தெளிவுபடுத்த வேண்டிய அவசியம் உள்ளது.
இந்த விசாரணைகளின்போது, நாம் பின்பற்றியிருந்த நடவடிக்கைகள் குறித்தும் மக்களுக்கு தெளிவுப்படுத்துவதற்காக இந்த ஊடக சந்திப்பை ஏற்பாடு செய்ய வேண்டியிருந்தது.
சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சராக 2 ஆண்டுகளும் 3 மாதமும் செயற்பட்டிருந்தேன். வழக்கு விசாரணைகளின் போது வெளிப்படைத்தன்மையான ஒழுங்கு நடவடிக்கைகளையே நாம் பின்பற்றியிருந்தோம்.
நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவது, நாட்டில் நீதியை நிலைநாட்டுவதுடன்,சட்டம் மற்றும் ஒழுங்கு பின்பற்றப்பட வேண்டும் என்பதற்காகவே மக்கள் எங்களுக்கு வாக்களித்திருந்தனர்.
மேலும், இன, மத, மொழி, கட்சி பேதமின்றி நாட்டிலுள்ள அனைத்து மக்களும் ஒரே விதமாக நடத்தப்பட வேண்டும் என்பதுடன் மகிழ்ச்சியாக வாழ்வதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி கொடுக்கப்பட வேண்டும் என்பதற்காகவே மக்கள் எம்மை ‍தேர்ந்தெடுத்திருந்தனர். இதனை நாம் நடைமுறைப்படுத்தி இருந்தோம்
எமது ஆட்சியின்போது திருடர்களை பிடிக்கவில்லை, வழக்குகளை விசாரணைக்கு எடுக்காமல் இருந்தார்கள், தாமதப்படுத்தி வருகின்றனர், அரசியல் பலிவாங்கல்கள் என பல்வேறு விதமான குற்றச்சாட்டுக்களை எம்மீது தற்போதும் சுமத்தி வருகின்றனர்.
உண்மையிலேயே, இது தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொண்டு முன்னெடுத்து சென்ற நிறுவனங்களுக்கு மிகவும் கஷ்டமான காலமாகவே அப்போதைய சூழ்நிலை இருந்தது. எவ்வாறு இது நடந்தது. நாம் அரசாங்கம் அமைப்பதற்கு முன்னர் இருந்தே, ஊழல் மோசடி குறித்து பாரியளவில் பேசப்பட்ட விடயமாகவே இருந்து வந்தது.
<p>எனினும், இவை முறைப்பாடுகளாக கிடைக்கப் பெற்றிருக்கவில்லை. பெரிய நபர்களுக்கு எதிராக வழக்கு தொடுப்பதற்கு எமது நாட்டில் அச்சம் காணப்பட்டிருந்தது. ஆகவே, அந்த அச்சத்தை இல்லாமல் செய்வதையே பிரதானமாக செய்ய வேண்டியிருந்தது.
மேலும், முறைப்பாடுகளை பதிவு செய்ய மற்றும் ஆவணப்படுத்துவதற்கான சிறந்த இடமொன்று அமைக்கப்பட வேண்டியிருந்தது. இதற்காகவே ஊழல் மோசடி ஒழிப்பு குழுவொன்றை அமைச்சரவை அங்கீகாரத்துடன் ஸ்தாப்பித்தோம். இந்த குழுவில் நாட்டின் சட்டம், கணக்காய்வு ஆகிய குறித்து கைத்தேர்ந்த அதிகாரிகள் எமக்கு தேவைப்பட்டனர். இவர்களை ஒன்றிணைத்துக்கொண்டே நாம் வேலைகளை முன்னெடுத்தோம்.
அவர்கள், அந்த முறைப்பாடுகளை பதிவு செய்து ஆவணப்படுத்தியிருந்ததுடன், விசாரணைகளுக்காக அவற்றுக்கு பொருத்தமான நிறுவனங்களுக்கு அனுப்பி வைத்தனர் ; 2016, ஆகஸ்ட் 31 இல் 1,077 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றிருந்தது. இதில் 438 பாரியளவிலான முறைப்பாடுகளாக இருந்ததுடன், நிர்வாக மட்டத்திலான ஊழல் மோசடிகள் 538 இருந்தன.
குற்றவியல் விசாரணை திணைக்களம் (சி.ஐ.டி), லஞ்சம் மற்றும் ஊழல் மோசடி தடுப்பு திணைக்களம், நிதி மோசடி விசாரணைப் பிரிவு ஆகியவற்றுக்கு இவை அனுப்பி வைக்கப்பட்டிருந்தன.
எந்தவொரு விசாரணைகளின்போதும் சட்ட மா அதிபரின் ஆலோசனைக்கு அமைவாகவும் வெளிப்படைத்தன்மையாக செயற்படுமாறு அவர்களிடம் வலியுறுத்தப்பட்டிருந்தது. இவ்வாறு விசாரணைகளில் ஏதேனும் முன்னேற்றம் கிடைக்கப்பெறும் பட்சத்தில் சட்ட மா அதிபரின் ஆலோசனையை பெற்று நீதிமன்றத்தில் ஆவணப்படுத்துமாறு கூறப்பட்டிருந்தது. வழக்கு விசாரணை நிறைவுக்கு செல்லும் வரை காத்திராமல், ஒவ்வொரு சந்தர்ப்பத்தின்போதும் ஆவணப்படுத்துமாறு கோரியிருந்தோம்.
சில சந்தர்ப்பங்களின்போது, சில அரசியல்வாதிகள், அரச உயரதிகாரிகள் ஆகியோரை தடுப்புக் காவலில் வைக்க வேண்டுமென கோரி நீதிமன்றங்களில் கோரப்பட்டதுடன், தடுப்புக் காவலிலும் வைக்கப்பட்டிருந்தனர்.
எனினும், இவற்றை முன்னோக்கி எடுத்துச் செல்வதற்கு விசாரணைகளை முன்னெடுக்கும் நிறுவனங்களுக்கும், ; சட்ட மா அதிபர் திணைக்களத்திற்கும் கடினமானதாக இருந்தது.
ஏனெனில், அதிகளவான முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றிருந்தன. இந்த விசாரணைளுக்கான சாட்சிகள் அழிக்கப்பட்டிருந்ததுடன், வேறு சில நாடுகளுடன் கொடுக்கல் வாங்கல்கள் இருந்தன, சர்வதேச கொடுக்கல் வாங்கல்கள் காணப்பட்டிருந்தன. பல்வேறு பிரச்சினைகள் காணப்பட்டன. இவ்வாறான பிரச்சினைகள் காரணமாக விசாரணைகளை முன்னெடுத்து செல்வதில் காலதாமதம் ஏற்பட்டது.
இவ்வாறான சந்தர்ப்பங்களின்போது சாட்சிகளை சேகரிக்கும் பிரச்சினை, சாட்சிகள் கொடுக்கும் நிறுவனங்கள் தாமதம் ஏற்படுத்தியிருந்ததுடன் தடைகள் இருந்ததுடன், அதிகாரிகள் பற்றாக்குறை நிலவியது. இவ்வாறான காரணங்கள் தொடர்ந்து வந்ததால் எங்களால் விசாரணைகளை முன்னெடுத்திச் செல்வதில் சிக்கல் காணப்பட்டது” என்றார்.

