யேர்மன் தமிழ்க் கல்விக் கழகத்தின் 32ஆவது அகவை நிறைவு விழா – ஸ்ருட்காட் அரங்கு

893 0

தமிழ்க் கல்விக் கழகத்தின் நிர்வாகப் பொறிமுறைகளுக்கு அமைவாகத் திட்டமிட்டவாறு வெஸ்லிங், குன்ஸ்ரெற்ரர்,ஆன்ஸ்பேர்க், கொற்றிங்கன் என நான்கு அரங்குகளில் 32ஆவது அகவை நிறைவு விழா சிறப்புடன் நடைபெற்று, நிறைவாக ஸ்ருட்காட் அரங்கில் தாயகனின் சிந்தனையைப் பதியமிட்டவாறு சிறப்போடு நிறைவுற்றுள்ளது. வேற்றுமொழிச் சூழலிற் பிறந்து வளரும் தமிழ்ச் சிறார்களை அணியப்படுத்தி மொழி, கலை, பண்பாடு, விளையாட்டு என ஆற்றலுடையோராய் வளர்த்தெடுப்பதை நோக்காகக் கொண்டு தமிழ்க் கல்விக் கழகம் செயற்பட்டு வருகிறது. அதன் பயனாகப் பெரு மற்றும் சிறு நகரங்களென வாழும் பெருமளவிலான தமிழ்க் குழந்தைகள் தமிழ்மொழி அறிந்தவர்களாக இருப்பதற்குத் தமிழ்க் கல்விக் கழகத்தினது தன்னலமற்ற சிந்தனையும் செயற்பாடும் கரணியமானபோதும், இப்பெரு முயற்சியோடு இணைந்து பயணிக்கும் ஆசான்களையும் திறன்களை வெளிப்படுத்தி வெற்றிபெற்ற மாணவர்களையும் தமிழாலயங்களின் பெற்றோரையும் அழைத்து ஆண்டுதோறும் அகவை நிறைவு விழாவைச் சிறப்போடு நடாத்திவருகின்றது.

சிறப்புவிருந்தினர்களாக வருகைதந்த திரு. பொன்னம்பலம் மகேஸ்வரன் அனைத்துலகத் தொடர்பகப் பொறுப்பாளர்-தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் யேர்மன் கிளைப் பொறுப்பாளர் திரு யோன்பிள்ளை சிறீரவீந்திரநாதன், கிறித்தவ ஜனநாயகக் கூட்டணியின் (CDU) ஸ்ருட்காட் வட்டாரத் தலைவரும், ஸ்ருட்காட் நகர முதல்வரின் ஆலோசகருமான திறஸிவோலொஸ் மலிஆறஸ் (Thrasivoulos Malliaras) இடதுசாரிக் கட்சியின்;(Die Linke) நாடாளுமன்ற உறுப்பினரான திரு பேண்ட் றிக்ஸ்ஸிங்கர், (Bernd Riexinger)  , ஸ்ருட்காட் நகரசபையின் சுதந்திர ஜனநாயகக் கட்சியின்(FDP) குழுத் தலைவரான திருமதி சீபெல் யுஉக்செல் (Sibel Yüksel) , பசுமைக் கட்சியைச் (Die Grünen) சேர்ந்தவரும், ஸ்ருட்காட் நகரசபைத் தவிசாளருமான திருமதி (Marina Silverii)மறினா சில்வெறி, தென் மாநிலப் பொறுப்பாளர்கள் ஸ்ருட்காட்; கோட்டப் பொறுப்பாளர், மற்றும் தமிழ்க் கல்விக் கழகத்தின் நிதிப்பிரிவுப் பொறுப்பாளர் ஆகியோர் இணைந்து மங்கல விளக்கேற்றியதைத் தொடர்ந்து அகவணக்கத்தோடு அகவை நிறைவுவிழா தொடங்கியது. தமிழ்க் கல்விக் கழகப் பொறுப்பாளர் திரு. செல்லையா லோகானந்தம் அவர்களின் வரவேற்புரை, கழகத்தின் நோக்குநிலையைச் சுட்ட, நடுவச் செயலக இளையோரின் நெறிப்படுத்தலோடு, தென் மாநிலத் தமிழாலயங்களின் இளையோர்களும் இணைந்து விழாவைச் சிறப்பாக நடாத்தினர்.

தேர்வு மதிப்பளிப்பு, தமிழ்த்திறன் மதிப்பளிப்பு என ஆற்றல் வளங்களின் அறுவடையாக அமைய, அந்த ஆற்றல்களை அணியமாக்கும் ஆசான்களின் பணியைப் போற்றும் வகையில் 5,10,15 ஆண்டுகள் பணிநிறைவிற்கான மதிப்பளிப்பு நடைபெற்றதோடு, வாழ்த்துரையும் இடம்பெற்றது. வேற்றுமொழிச் சூழலுள் வாழ்கின்றபோதும் தமது பிள்ளைகளைத் தமிழோடு பயணிக்கச் செய்யும் வகையிற் தமிழ்ப் பெற்றோரின் அயராத முயற்சியோடு, ஆசான்களின் ஒருங்கிணைந்த உழைப்பின் பயனாக ஆண்டு12வரை தமிழாலயங்களில் கற்றலை நிறைவு செய்தோருக்கான மதிப்பளிப்பு அடுத்துவரும் தலைமுறைக்கான தமிழை எடுத்துச் செல்லும் தலைமுறையின் எழுகையாக விழாவுக்கு அழகூட்டியது. மதிப்பேற்புக்கான சிறப்பு ஆடையணிந்து நடைபவனியாக மண்டப முன்றலிலிருந்து பார்வையாளர்களின் கரவொலியோடு அழைத்துவரப்பட்டு அவையோருக்கான வணக்கத்தை தெரிவித்தபின், அவர்களுக்குகென ஒதுக்கப்பட்ட இருக்கைகளில் அமர்ந்து தமது ஆசான்களின் மதிப்பளிப்போடு இணைந்திருந்தனர். 20 ஆண்டுகள் பணிநிறைவிற்காக ‘தமிழ் வாரிதி’ எனவும் 25 ஆண்டுகள் பணிநிறைவிற்காக ‘தமிழ் மாணி’ எனப் பட்டமளிப்போடு வாழ்த்துரைகள், ஏற்புரைகள் என நிறைவுக்கு வர, முப்பது ஆண்டுகள் தமிழ்ப் பணியாற்றியமைக்காகச் சிறப்பு மதிப்பளிப்புத் தொடங்கியது.

தமிழ்க் கல்விக் கழகத்தின் கல்வி மற்றும் தமிழ்த்திறன் பிரிவுப் பொறுப்பாளர் திரு. இராஜ மனோகரன் அவர்களைத் தமிழ்க் கல்விக் கழகத்தின் பிரிவுசார் பொறுப்பாளர்கள், முன்னணிச் செயற்பாட்டாளர்கள் மற்றும் மாநிலச் செயற்பாட்டாளர்கள் இணைந்து அரங்கிற்கு அழைத்துவரக் கல்விக் கழகப் பொறுப்பாளரோடு, கலை மற்றும் விளையாட்டுப் பிரிவுப் பொறுப்பாளர்கள் இணைந்து பன்னீர் தெளித்துச் சந்தனம் பூசி வரவேற்று மதிப்பளிக்கப்பட்டது. யேர்மனியில் தமிழ் 30 ஆண்டுகளைச் சுட்டும் வகையிலான மூன்று உடுக்கள் பொறிக்கப்பட்ட பதக்கம் அணிவிக்கப்பட்டு மதிப்பளிக்கப்பட்டது.

விழாவின் சிறப்புக்குச் சிறப்பூட்டும் வகையில் அரங்கைப் பொறுப்பேற்ற தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினரின் ஒழுங்கமைப்பில் விழா அரங்கு வேறொரு பரிமாணத்தோடு, மற்றுமொரு மதிப்பளிப்பிற்கு அணியமாகியது. தமிழ்க் கல்விக் கழகப் பொறுப்பாளர் திரு. செல்லையா லோகானந்தம் அவர்களின் 30 ஆண்டுகாலப் பணியைச் சிறப்பித்து, யேர்மன் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் பொறுப்பாளர் மற்றும் மாநிலப் பொறுப்பாளர்கள், துணைப்பொறுப்பாளர் ஆகியோரும் இணைந்திருக்கத் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினரால் “செம்மையாளன்” என்ற பட்டம் வழங்கப்பட்டு, மூன்று உடுக்கள் பொறிக்கப்பட்ட பதக்கமும் அணிவிக்கப்பட்டது. மதிப்பளிப்போடு வாழ்த்துரைகள், ஏற்புரைகள் என 30 ஆண்டுப் பணிநிறைவிற்கான மதிப்பளிப்புகள் நிறைவுற 12ஆம் ஆண்டை நிறைவு செய்த மாணவர்களுக்கான மதிப்பளிப்பும் இடம்பெற்றது. இந்த மாணவர்களை நோக்கித் ‘தமிழுக்கும் தாயத்திற்காகவும் நாம் என்ன செய்யப் போகின்றோம்? என்று தமிழ் இளையோர் அமைப்பின் பொறுப்பாளர் செல்வி அஞ்சனா பகீதரன் அவர்கள் தனது உரையிலே வினவியிருந்தார்.

கற்றோர், கற்பித்தோர், நிர்வகித்தோரென மதிப்பளிப்புகள் நிறைவுற அகவை நிறைவு விழாவின் முத்தாரமாய் தமிழாலயக் குடும்பம் ஒன்றுகூடி முயற்சியும் பயிற்சியுமாக ஒன்றிணைந்து உழைத்ததன் அறுவடையாகத் தமிழ்த்திறன், தேர்வு, கலைத்திறன் எனத் தமிழாலயங்கள் வெற்றிக்கனிகளைத் தமதாக்கியதன் பயனாகச் சிறப்பு மதிப்பளிப்புகள் வழங்கப்பட்டன.

தென்மாநில ஸ்ருட்காட் அரங்கிலே தமிழ்த்திறன் போட்டியிலே நாடுதழுவிய மட்டத்தில் முதலாம் நிலையைப்பெற்றுத் தமிழாலயம் முன்சன் ‘மாமனிதர்’ இரா.நாகலிங்கம் ஐயா விருதினைப் பெற்றதோடு, 2020,2021இன் கல்வியாண்டிற்கான பொதுத் தேர்வில் முதலாம் நிலையைப் பெற்றமைக்கும் தமிழாலயம் முன்சன் மதிப்பளிப்பைப் பெற்றுக்கொள்ள, கலைத்திறன் போட்டியிலே மாநில மட்டத்தில் முறையே முதல் மூன்று நிலைகளைத் தமிழாலயம் ஸ்ருற்காட், தமிழாலயம் லுட்விக்ஸ்பூர்க், தமிழாலயம் நூர்ன்பேர்க் ஆகியனவும் கலைத்திறனில் நாடுதழுவிய மட்டத்தில் தமிழாலயம் ஸ்ருட்காட் முதலாம் நிலையைப் பெற்றமைக்கும் எனத் தனித்துவமாகத் தமிழாலயங்கள் அணி அணியாக அரங்கிற்கு வருகைதந்து தங்கள் மகிழ்வுகளைக் கொண்டாடியதோடு மதிப்பேற்பையும் பெற்றுக்கொண்டனர். வெற்றிபெற்ற தமிழாலயங்களுக்குப் பிரிவுசார் பொறுப்பாளர்களின் வாழ்த்துரைகளோடு, தமிழ்க் கல்விக் கழகப் பொறுப்பாளரின் வாழ்த்துரையும் இடம்பெற்றது. நிறைவாக விழாவைச் சிறப்பாக நடாத்திய இளையோருக்கான மதிப்பளிப்போடு, நன்றியுரையைத் தொடர்ந்து நம்புங்கள் தமிழீழம் என்ற தமிழரின் நம்பிக்கையைப் பதிவுசெய்தவாறு, தமிழ்க் கல்விக் கழகத்தின் இவ்வாண்டுக்கான 32ஆவது அகவை நிறைவு விழா ஸ்ருட்காட் அரங்கிற் சிறப்புடன் நிறைவுற்றது.