மன்னார், குஞ்சுக்குளம் பகுதியில் தமிழ் மக்களுக்கு சொந்தமான 200 ஏக்கர் விவசாய நிலங்களை, வன இலாகாவினர் சுவீகரிக்க முயற்சி(காணொளி)

273 0

மன்னார், குஞ்சுக்குளம் பகுதியில் தமிழ் மக்களுக்கு சொந்தமான 200 ஏக்கர் விவசாய நிலங்களை, வன இலாகாவினர் சுவீகரிக்க முயற்சி எடுத்துள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

மன்னார், மடு பிரதேச செயலகர் பிரிவிற்குட்பட்ட குஞ்சுக்குளம் பகுதியில் 1965ஆம் ஆண்டு முதல் விவசாயம் செய்து வந்த நிலங்கள் கடந்தகால யுத்த சூழ்நிலை காரணமாக, விவசாயம் செய்ய முடியாது கைவிடப்பட்டிருந்ததாக மக்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த 35 வருடங்களாக இடம்பெயர்ந்து மீள்குடியேற்றம் செய்யப்பட்டபோதும், சொந்த நிலங்களில் விவசாயத்தை மேற்கொள்ள முடியாதுள்ளதாகவும் வனஇலாகா திணைக்கத்தினர் தமது காணிகளில் உள்நுழைய அனுமதி தர மறுப்பதாகவும் மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

தமது காணிகளை துப்பரவு செய்து விவசாய நடவடிக்கைகளை முன்னெடுக்க முயன்ற நிலையில் தமது காணிகளை துப்புரவு செய்ய வேண்டாம் என வனஇலாகாவினர் தெரிவிப்பதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த பிரதேசத்தில் பலர் இடம்பெயர்ந்த நிலையில் தற்போது மீள்குடியேறி வாழ்ந்து வருகின்றனர்.  1965, 1967, 1970 மற்றும் 1975 ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் விவசாய செய்கைக்காக இப்பகுதியில் மக்களுக்கு காணிகள் வழங்கப்பட்டிருந்தன.

அதற்கான உறுதிப் பத்திரங்கள் தம்மிடம் உள்ளதாகவும், சிலரது காணிகளுக்கான பேமிற் முன்னைய ஜனாதிபதியான சந்திரிக்கா குமாரதுங்க காலப்பகுதியில் உறுதிகளாகவும் மாற்றப்பட்டு வழங்கப்பட்டிருந்ததாகவும் குறித்த பகுதி மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்நிலையில், தமது காணிகளில் விவசாயம் செய்ய அனுமதிக்கப்பட வேண்டும் எனவும், தமது 200 ஏக்கர் வரையிலான விவசாய நிலங்களையும் வனஇலாகாவினர் உடனடியாக விடுவிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ள அப்பகுதி மக்கள் பிரதிநிதிகள், ஜனாதிபதி மற்றும் பிரதமர் இந்த விடயத்தில் கவனம் செலுத்தி பாதிக்கப்பட்ட தமக்கு தீர்வைப் பெற்று தர வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.