மூங்கிலாறு மருத்துவமனை மீது தாக்குதல்: ஆர்பாட்டத்தில் இறங்கிய ஊழியர்கள்

162 0

முல்லைத்தீவு – மூங்கிலாறு ஆதார மருத்துவமனையில் தனது பிள்ளைகளுக்குச் சிகிச்சையினை பெற்றுக்கொள்ள முடியாத தந்தை ஒருவர் ஆத்திரமடைந்து மருத்துவமனை மீது தாக்குதல் நடத்தியுள்ளார்.

குடும்பஸ்தர் ஒருவர் தனது இரண்டு பெண் பிள்ளைகளுக்குக் காய்ச்சல் ஏற்பட்டுள்ள நிலையில், நேற்று மூங்கிலாறு ஆதார வைத்தியசாலைக்கு நோய்க்கு சிகிச்சை பெறக்கூட்டிச் சென்றுள்ளார்.

அங்கு அனுமதிச்சிட்டு வழங்கப்பட்ட பின்னர் வைத்தியர் இரண்டு மணியின் பின்னரே நோயாளியைப் பார்வையிடுவார் என கூறப்பட்டுள்ளது. அதனால் கோபமடைந்த அவர் வைத்தியசாலையின் கண்ணாடியை அடித்து உடைத்து அங்கு காவல் கடமையிலிருந்த காவலாளியையும் தாக்கி மருத்துவமனையின் பெயர்ப்பலகையினையும் சேதப்படுத்தியுள்ளார்.

இவ்வாறான நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்து இன்று மூங்கிலாறு ஆதார மருத்துவமனை வைத்தியர்கள், ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பினை மேற்கொண்டு கவனயீர்ப்பு நடவடிக்கை ஒன்றினை முன்னெடுத்துள்ளனர்.

அடையாளம் காணப்பட்ட நபரினால் வைத்தியசாலையின் அரச சொத்துக்களுக்குச் சேதம் ஏற்படுத்தப்பட்டு ஊழியர்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டமையினை கண்டித்து ஒரு மணிநேர அடையாள பணி பகிஷ்கரிப்பினை மேற்கொண்டுள்ளனர்.

மூங்கிலாறு ஆதார மருத்துவமனையில் சிகிச்சைக்காக செல்லும் மக்கள் நீண்டநேரம் காத்திருந்து சிகிச்சை பெற்று மருந்தினை பெற்றுக்கொள்ள வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

இந்த மருத்துவமனையின் மருந்தாளர் தேவிபுரம் மருத்துவமனையிலும் மருந்து வழங்கிவிட்டு சில நேரங்களில் மாலை வேளையிலேயே அல்லது நண்பகலுக்குப் பின்னரான வேளையிலேயே மருந்து வழங்கும் நடவடிக்கையினை முன்னெடுத்து வருவதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இதனால் மருத்துவமனைக்குச் செல்லும் நோயாளர்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளார்கள். இவ்வாறான நிலையினை மருத்துவ அதிகாரிகள் கவனத்தில் எடுத்து இதனைத் தீர்த்துவைக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மருத்துவமனை அரச சொத்து சேதப்படுத்தப்பட்டுள்ளமை மற்றும் ஊழியர்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளமை என்பன தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், பொலிஸார் சட்ட நடடிவக்கை எடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.