ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் அரசாங்கத்தை முழுமையாக பதவி விலகுமாறு வலியுறுத்தி கொழும்பு – காலி முகத்திடலில் முன்னெடுக்கப்பட்டு வரும் ஆர்ப்பாட்டம் இன்று 19 ஆவது நாளாகவும் தொடர்கின்றது.
இந்நிலையில், காலிமுகத்திடல் போராட்டகளத்தில் நேற்று பெரஹரா போன்ற நிகழ்வு ஏற்பாடு செய்யபட்டிருந்தது. அத்துடன் இன்று அதிகாலை குறித்த பகுதியில் பிரித் ஓதும் பௌத்த மத நிகழ்வும் ஏற்பாடு செய்யப்பட்டு இடம்பெற்றது.
காலிமுகத்திடல் ஆர்ப்பாட்டத்தில் யுத்தத்தால் ஊனமுற்ற இராணுவ வீரர்களும் அங்கு தங்கியிருந்து அரசாங்கத்திற்கு எதிரான தொடர் எதிர்ப்பு நடடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதேவேளை, அத்தியாவசிய பொருட்களின் விலைகள் சடுதியாக அதிகரித்து வருகின்றமை, அவற்றுக்கு நிலவும் தட்டுப்பாடு , பொருட்களை கொள்வனவு செய்வதற்காக நீண்ட வரிசைகளில் காத்திருக்க வேண்டிய நிலைமை உள்ளிட்ட பல்வேறு காரணிகளை முன்னிறுத்தி நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் ஆர்ப்பாட்டங்களின் மற்றுமொரு கட்டம் அலரி மாளிகைக்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை பதவி விலகுமாறு கொழும்பு – காலி முகத்திடலில் ஆர்ம்பிக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தையடுத்து அப்பகுதியில் ‘கோட்டா கோ கம’ உருவாக்கப்பட்டதைப் போன்று தற்போது கொழும்பு – கொள்ளுப்பிட்டியில் உள்ள அலரி மாளிகை வளாகத்தில் ‘மைனா கோ கம’ உருவாக்கப்பட்டுள்ளது.
மைனா கோ கம’ என்ற குறித்த ஆர்ப்பாட்ட பகுதியை அதில் கலந்துகொண்டுள்ள மக்கள் விழாவைப் போன்ற பாணியில் திறந்து வைத்துள்ளனர்
இவ்வாறு அங்கு ஆர்ப்பாட்டத்தினை ஆரம்பித்த மக்களை அங்கிருந்து வெளியேற்றுவதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்ததையடுத்து இரு தரப்பினருக்குமிடையில் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதனால் அங்கு அமைதியற்ற நிலைமை ஏற்பட்டது. அலரி மாளிகைக்கு முன்பாக கூடியுள்ள மக்களை அங்கிருந்து அகற்றுவதற்கு உத்தரவிடுமாறு கோரி கொள்ளுப்பிட்டி பொலிஸார் முன்வைத்த கோரிக்கையை கொழும்பு மேலதிக நீதவான் நிராகரித்திருந்தார்.
இந்நிலையில் எதிர்ப்பில் ஈடுபடுவோருக்கு இடையூறு ஏற்படும் வகையில் பொலிஸார் நடைபாதையில் பொலிஸ் பஸ்களை நிறுத்தியுள்ளதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் குற்றஞ்சுமத்தினர்
பொலிஸ் வாகனமொன்றை செலுத்திய சிவில் பிரஜையொருவர் அதனை ஆர்ப்பாட்டம் இடம்பெறும் இடத்திற்கருகில் நிறுத்தி பின்னர் அங்கிருந்து ஓடிச் சென்றதாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த இளைஞர் ஒருவர் தெரிவித்தார்.</

