சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தை மற்றும் அதனிடமிருந்து கிடைக்கப் பெறவுள்ள ஒத்துழைப்புக்கள் குறித்து நிதி அமைச்சர் அலி சப்ரி பாராளுமன்றத்தில் தெளிவுபடுத்துவார்.
புதிய வரிக்கொள்கையை நடைமுறைப்படுத்துமாறு சர்வதேச நாணய நிதியத்தினால் ஆலோசனை வழங்கப்படவில்லை என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.
நிதி அமைச்சர் அலி சப்ரி தலைமையிலான குழுவினர் மேற்கொண்ட பேச்சுவார்த்தைகளின் அடிப்படையில் சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து எவ்வாறான நிவாரணங்கள் கிடைக்கப்பெறும் ? அவர்களால் வலியுறுத்தப்பட்டுள்ளமைக்கமைய இலங்கை நடைமுறைப்படுத்தவுள்ள புதிய வரிக்கொள்கை யாது? என நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் கேட்க்கப்பட்டது.
இதற்கு பதிலளிக்கும் போதே அமைச்சரவை பேச்சாளர் நாலக கொடஹேவா மேற்கண்டவாறு தெரிவித்தார்.</p>
அவர் மேலும் குறிப்பிடுகையில் ,
அடுத்த பாராளுமன்ற அமர்வின் போது நிதி அமைச்சரால் இது தொடர்பில் பாராளுமன்றத்தில் விசேட உரை ஆற்றப்படும்.
சர்வதேச நாணய நிதியம் எமக்கு ஒத்துழைப்பு வழங்குவதாக அறிவித்ததன் பின்னர் , கடந்த சில மாதங்களுக்கு முன்னர் காணப்பட்ட நிலையை விட பொருளாதாரத்தில் பலமிக்க நிலைமையை நாம் அடைந்துள்ளோம்.
மீள செலுத்தப்பட வேண்டிய கடன் தொடர்பில் எவ்வாறான நடவடிக்கைகளை முன்னெடுப்பது என்பதே எமக்கு காணப்பட்ட பாரதூரமான பிரச்சினையாகும்.
அதற்கமைய கடன் மறுசீரமைப்பு என்ற விடயத்தில் எமக்கு ஏற்கனவே கடன் வழங்கியுள்ளவர் மற்றும் எதிர்காலத்தில் வழங்க உள்ளவர்கள் இதற்கு எவ்வாறான பிரதிபலிப்பை வழங்குவார்கள் என்ற சிக்கலும் காணப்பட்டது.
நாம் சர்வதேச நாணய நிதியத்திற்குச் செல்லாமல் தனித்து கடனை மீள செலுத்த முடியாது என்று அறிவித்திருந்தால் , அதன் பின்னர் எந்தவொரு தரப்பினரும் எமக்கு உதவியளித்திருக்க மாட்டார்கள்
எனினும் அதிஷ்டவசமாக காலம் தாழ்த்தியேனும் சர்வதேச நாணய நிதியத்தை நாடியுள்ளமை எமக்கு பெரும் பலமாக அமைந்துள்ளது.
எமக்கு கைகொடுப்பதற்கு சர்வதேச நாணய நிதியம் உள்ளது என்பதை ஏனைய நாடுகள் அங்கீகரித்துள்ளன.
அதற்கமைய உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி உள்ளிட்டவை எமக்கு நிவாணரங்களையும் , கடனுதவிகளையும் வழங்க ஆரம்பித்துள்ளன.
எனினும் வரிகளை அதிகரிக்குமாறும் அல்லது வரி கொள்கைகளில் திருத்தங்களை மேற்கொள்ளுமாறும் சர்வதேச நாணய நிதியம் எவ்வித ஆலோசனைகளையும் வழங்கவில்லை.
மாறாக ஏற்கனவே பெற்றுள்ள கடன்களை எவ்வாறு செலுத்துவோம்? அதற்கான வேலைத்திட்டங்கள் என்ன? என்பதையே சர்வதேச நாணய நிதியம் கோரியுள்ளது.
அதனை விரைவில் முன்வைப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டள்ளது என்றார்.

