நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலைமைகளுக்கு தற்போதைய அரசாங்கமும் பொறுப்புக்கூற வேண்டுமென அமைச்சரவை பேச்சாளர் நாலக கொடஹேவா தெரிவித்தார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு தொடர்ந்து உரையாற்றிய அவர், கொரோனா வைரஸ் காரணமாக உலகளவில் விநியோகச் செயற்பாடுகள் பாதிக்கப்பட்டன. இதனால் உலக சந்தையில் எரிபொருள், உரம் உள்ளிட்ட பொருள்களின் விலைகள் இரட்டிப்பாக அதிகரிக்கப்பட்டுள்ளன.
இதன் பாதிப்புக்கு நாட்டு மக்கள் முகங்கொடுத்து வருகிறார்கள். இதனால் மக்களுக்கு நிவாரணங்களைப் பெற்றுக்கொடுக்க நிதி அமைச்சர் அலி சப்ரி எமக்கு உதவும் நாடுகளுடன் கலந்துரையாடி வருகிறார் என்றார்.
இன்னும் ஒருசில மாதங்களுக்குள் நாட்டு மக்களுக்கு விசேட நிவாரணங்களை வழங்குவதற்கு அரசாங்கம் முயற்சிப்பதாகவும் தெரிவித்த அவர், நாட்டை ஆட்சி செய்துவரும் தற்போதைய அரசாங்கம் உள்ளிட்ட கடந்த இரு அரசாங்கங்களும் நாட்டின் தற்போதைய நிலைமைகளுக்குப் பொறுப்புக்கூற வேண்டும் என்றார்.

