அரசாங்கத்தை பதவி நீக்கம் செய்ய 120 பெரும்பான்மை ஆதரவுள்ளது

129 0

பிரதமர் உட்பட அரசாங்கத்தை பதவி நீக்க 113 பெரும்பான்மை பலத்திற்கு பதிலாக தற்போது 120 பெரும்பான்மை பலம் பாராளுமன்றில் உள்ளது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஆதரவான பிரேரணையில் 46 உறுப்பினர்கள் மாத்திரமே கைச்சாத்திட்டுள்ளனர்
பதவி விலக பிரதமர் தயாராகவுள்ளார் இருப்பினும் அவரது பதவியை தவறாக பயன்படுத்தும் தரப்பினர் அவரை பதவி விலக இடமளிக்காமல் அழுத்தம் பிரயோகிப்பதை அவதானிக்க முடிகிறது என முன்னாள் அமைச்சர் உதயகம்மன்பில தெரிவித்தார்.

பிவிதுறு ஹெல உறுமய கட்சி காரியாலயத்தில்  இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கை பிரேரணையை கொண்டுவருதற்கு முன்னர் 113 பெரும்பான்மை பலத்தை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள் என ஐக்கிய மக்கள் சக்தியினரிடம் வலியுறுத்தினோம்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உட்பட அரசாங்கத்தை நீக்க 113 பெரும்பான்மைக்கு பதிலாக தற்போது 120 பெரும்பான்மை பாராளுமன்றில் தோற்றம் பெற்றுள்ளது.

பாராளுமன்றில் ஐக்கிய மக்கள் சக்தியின் 65 உறுப்பினர்கள், அரசாங்கத்திலிருந்து விலகி சுயாதீனமாக செயற்படும் 39 உறுப்பினர்கள்,ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பின்வரிசை உறுப்பினர்களின் 10 பேர்,அரசாங்கத்திற்கு வழங்கிய ஆதரவை நீக்கிக் கொண்ட 3 முஸ்லிம் உறுப்பினர்கள் உட்பட பாராளுமன்ற உறுப்பினர்களான நாலக கொடஹேவா,டலஸ் அழகப்பெரும,சரித ஹேரத் ஆகியோர் பிரதமர் உட்பட அரசாங்கம் முழுமையாக பதவி வலிக வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உள்ளார்கள்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஆதரவு வழங்கும் யோசனை கடந்த வாரம் முன்னெடுக்கப்பட்டது.

பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்களுக்கு தனிப்பட்ட முறையில் உரையாடி குறித்த பிரேரணைக்கு ஆதரவு வழங்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

பிரதமருக்கு ஆதரவு வழங்கும் யோசனையில் 46 உறுப்பினர்கள் மாத்திரமே கைச்சாத்திட்டுள்ளனர்.
இந்த விடயம் பொய்யாயின் குறித்த பிரேரணை பத்திரத்தை ஊடகங்களுக்கு பகிரங்கப்படுத்துமாறு பொதுஜன பெரமுன முன்னணியின் பொதுச்செயலாளருக்கு சவால்விடுக்கிறேன்.

புதவி விலக தயார் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மகாசங்கத்தினரிடமும், தனக்கு நெருக்கமான தரப்பினரிடமும் குறிப்பிட்டுள்ளார்.

2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 08ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் பெறுபேறு வெளியாவதற்கு முன்னரே அவர் தான் தோல்வியடைந்து விட்டேன் ஆகவே பொறுப்புக்களை கையளித்து விட்டு வெளியேறுவது சிறந்தது என குறிப்பிட்டார்.
2015.01.09ஆம் திகதி அதிகாலை 03 மணிக்கு முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை அழைத்து அரசாங்கம் தொடர்பிலான பேச்சுவார்த்தையை முன்னெடுத்து விட்டு காலை 06.30இற்கு பொறுப்பிலிருந்து விலகினார்.

சகல தரப்பினரது கருத்துக்களுக்கும் மதிப்பளித்து பதவி விலக பிரதமர் தயாராகவுள்ளார்.

பிரதமரின் பதவியை தவறான முறையில் பயன்படுத்தும் ஒரு சிலர் பிரதமரை பதவியில் இருந்து விலகாமலிருக்க அழுத்தம் பிரயோகிக்கின்றனர்.

பிரதமர் உட்பட முழு அரசாங்கமும் முழுமையாக பதவி விலக வேண்டும் இல்லாவிடின் அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை இவ்வாரம் கொண்டு வருவோம் என்றார்.