இனம் மற்றும் மதங்களுக்கிடையில் முரண்பாடுகளை தோற்றுவிப்பதற்கு தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் அரசியல் சதித்திட்டங்களை தோல்வியடையச் செய்து நாம் அனைவரும் இலங்கையர்கள் என்ற அடிப்படையில் ரோமில் புனித பாப்பரசர் தலைமையில் இடம்பெறவுள்ள ஆராதனையில் கலந்து கொள்ளவுள்ளதாக பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்தார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களால் பாதிக்கப்பட்டவர்கள் அடங்கிய குழுவினருடன் வத்திக்கான் சென்றுள்ள பேராயர் , அங்கிருந்து வெளியிட்டுள்ள விசேட அறிவிப்பிலேயே இதனைத் தெரிவித்தார். அதில் அவர் மேலும் கூறியிருப்பதாவது
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் பின்னணியில் உள்ளவர்கள் யார் என்பது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்குமாறு தற்போதைய அரசாங்கத்திடம் தொடர்ச்சியாக கோரினோம்
வெ வ்வேறு வகைகளில் ஜனநாயக ரீதியான போராட்டங்களை முன்னெடுத்து விசாரணைகளை இதனை விட சிறப்பாக முன்னெடுக்குமாறும் அரசாங்கத்திடம் கோரினோம்.
என்னும் இன்று வரையிலும் அவ்வாறானதொரு நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இதன் பெரும்பகுதியை மறைப்பதற்கு முயற்சிக்கின்றமையை உணர்ந்து கொண்டோம். இதனால் வேறு வழியின்றி சர்வதேசத்தை நாடினோம்.
சர்வதேசத்திற்குச் சென்று புனித பாப்பரசருக்கும் இது தொடர்பில் தெளிவுபடுத்தினோம்
அதற்கமைய ரோமில் விசேட செயற்பாடொன்றை முன்னெடுப்பதாக புனித பாப்பரசர் உறுதியளித்தார். அதற்கமையவே இன்று திங்கட்கிழமை இதாலியிலுள்ள இந்து, பௌத்த மற்றும் இஸ்லாம் என அனைத்து இலங்கை பிரஜைகளின் பங்குபற்றலுடனும் விசேட ஆராதனைகள் இடம்பெறவுள்ளன.
நாட்டில் சூழ்ச்சிகளை தோல்வியடைச் செய்து , இனம் மற்றும் மதங்களுக்கிடையில் முரண்பாடுகளை தோற்றுவிப்பதற்கு தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் அரசியல் சதித்திட்டங்களை தோல்வியடையச் செய்து நாம் அனைவரும் இலங்கையர்கள் என்ற அடிப்படையில் இந்த ஆராதனையை முன்னெடுப்பதற்கு எதிர்பார்த்துள்ளோம்.இதன் மூலம் எந்தவொரு அரசியல் தலையீடுகளுக்கும் இடமளிக்கப்பட மாட்டாது. இதற்கு தலைமை வகிப்பதற்காக புனித பாப்பரசருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கின்றோம்
உயிர்த்த ஞாயிறு குண்டு தாக்குதல்களால் தமது அன்புக்குரியவர்களை இழந்தவர்களினதும் , வாழ்நாள் முழுவதும் குணப்படுத்த முடியாததுமான உடல் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளவர்களினதும் துயரத்தை புனித பாப்பரசருக்கும் சர்வதேசத்திற்கும் உணர்த்துவதற்காகவே நாம் இந்த நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளோம்.
;இந்த விசேட ஆராதனைகளின் போது இலங்கையின் தற்போதைய நெருக்கடிகள் விரைவில் முடிவுக்கு கொண்டு வரப்பட வேண்டும் என்றும் பிரார்த்திக்கப்படவுள்ளது.
நாட்டு நெருக்கடி நிலைமைகளால் அனைத்து வகையிலும் பாதிக்கப்பட்டு வீதிக்கு இறங்கி நியாயம் கோரி போராடும் மக்கள் அனைவருடனும் நாம் இருக்கின்றோம்.
நாம் எமது நாட்டை நேசிக்கின்றோம். எனவே சிறிதளவும் நாட்டுக்கு நாம் தீங்கிழைக்க மாட்டோம். அனைவருடனும் சகோதரத்துவத்துடன் செயற்படுவோம் என்றார்.

