21 ஆவது திருத்தம் நிறைவேற்றப்படும் வரை அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை குறித்து அவதானம் செலுத்த முடியாது – திஸ்ஸ விதாரண

272 0

முழு நாட்டிற்கும் வினையாக அமைந்துள்ள அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தம் முழுமையாக இரத்து செய்யப்பட வேண்டும் என்பது நாட்டு மக்களின் ஒருமித்த குரலாக உள்ளது.

அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தம் நிறைவேற்றப்படும் வரை அரசாங்கம் ஆட்சியில் இருப்பது அவசியமானது. எனவே அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை குறித்து தற்போது அவதானம் செலுத்த முடியாது  என  லங்கா சமசமாஜ கட்சியின் தலைவர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்தார்.

சமகால அரசியல் நிலவரம் தொடர்பில் வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

நாட்டின் எதிர்காலத்தை கருத்திற்கொண்டு சர்வதேச நாணய நிதியம் விதிக்கும் நிபந்தனைகளை புறக்கணிக்க முடியாத நெருக்கடியான சூழ்நிலைமை திட்டமிட்ட வகையில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

முன்னாள் நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷ பொருளாதார நெருக்கடியினை திட்டமிட்ட வகையில் தீவிரப்படுத்தி முழு நாட்டு மக்களையும் வீதிக்கிறக்கியுள்ளார்.

சமூக கட்டமைப்பில் தோற்றம் பெற்றுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காக  கடந்த இருவாரகாலமாக பாராளுமன்றம் கூடியது.

வாதப்பிரதிவாதங்கள் மாத்திரம் இடம்பெற்றுள்ளதே தவிர நடைமுறைக்கு  பொருந்தும் வகையில் எவ்வித தீர்மானங்களும் முன்னெடுக்கப்படவில்லை. பாராளுமன்றத்தின் மீதான மக்களின் நம்பிக்கையும் குறைவடைந்துள்ளன.

சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்வது குறித்து ஆரம்பததில் எதிர்ப்பு தெரிவித்ததுடன், மாற்று திட்டங்களையும் அரசாங்கத்திற்கு முன்வைத்தோம்

முன்வைக்கப்பட்ட யோசனைகள் எவையும் செயற்படுத்தப்படவில்லை. தற்போது சர்வதேச நாணய நிதியத்தை தவிர வேறு மாற்றுவழி இல்லை என்ற நிலைமை ஏற்பட்டுள்ளது.

பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண வேண்டுமாயின் புதிய பிரதமர் தலைமையில் இடைக்கால அரசாங்கத்தை ஸ்தாபிப்பது அவசியம் என்பதை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை பதவி விலகுமாறு மகாசங்கத்தினர் உட்பட சிரேஷ்ட அரசியல்வாதிகள் வலியுறுத்தியுள்ளார்கள். இருப்பினும் அவர் பதவி விலக இதுவரையில் இணக்கம் தெரிவிக்கவில்லை

ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட அமைச்சரவை மீது நாட்டு மக்களுக்கு நம்பிக்கை கிடையாது. அரச தலைவர் மீது நம்பிக்கை இல்லாத போது அவரது தீர்மானங்களில் மக்கள் எவ்வாறு நம்பிக்கை கொள்வார்கள்? புதிய அமைச்சரவை நியமனத்தை தொடர்ந்து சமூக கட்டமைப்பிலான பிரச்சினைகள் தீவிரமடைந்துள்ளதே தவிர குறைவடையவில்லை.

அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தம் முழுமையாக இரத்து செய்யப்பட வேண்டும் ; என்பதே நாட்டு மக்களின் ஒருமித்த கருத்தாக உள்ளது

அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை குறித்து தற்போது அவதானம் செலுத்த முடியாது. அரசியலமைப்பின் 21ஆவது திருத்தம் நிறைவேற்றப்படும் வரையிலாவது தற்போதைய அரசாங்கம் ஆட்சியில் இருக்க வேண்டும் என்றார்.