ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரெயிலில் கைத்துப்பாக்கியை தவற விட்ட பொன்மாணிக்கவேல்

314 0

சென்னையில் இருந்து ஈரோட்டுக்கு வந்த ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரெயிலில் பொன்மாணிக்கவேல் தவற விட்ட கைத்துப்பாக்கியை ஊழியர்கள் மீட்டு போலீசில் ஒப்படைத்தனர்.

தமிழக சிலை தடுப்பு பிரிவு முன்னாள் ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் ஈரோட்டில் நடைபெறும் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்க நேற்று இரவு சென்னையில் இருந்து ஏற்காடு எக்ஸ்பிரசில் புறப்பட்டார்.
அவர் ஏற்காடு எக்ஸ்பிரசில் ஏ1 ஏ.சி. கோச்சில் பயணம் செய்தார். அப்போது தனது பாதுகாப்புக்காக வைத்திருந்த கைத்துப்பாக்கியை இருக்கைக்கு அடியில் வைத்து இருந்தார். அதில் 8 தோட்டாக்கள் இருந்தது.
ரெயில் நேற்று காலை ஈரோடு வந்து நின்றதும் பொன்மாணிக்கவேல் கைத்துப்பாக்கியை தவறுதலாக எடுக்காமல் சென்று விட்டார். இந்த நிலையில் பயணிகள் அனைவரும் இறங்கிய பின்பு ரெயில் பணிமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
இதையடுத்து வழக்கம்போல் ரெயிலை ஊழியர்கள் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர். அப்போது ஏ1 ஏ.சி. கோச்சில் கைத்துப்பாக்கி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் இதுகுறித்து ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து போலீசார் அங்கு விரைந்து சென்று துப்பாக்கியை கைப்பற்றி விசாரணை நடத்தினர். இந்த நிலையில் பொன்மாணிக்கவேல் தனது கைத்துப்பாக்கியை ரெயிலில் தவற விட்டதை அறிந்து ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
அப்போதுதான் ஊழியர்கள் எடுத்த துப்பாக்கி பொன்மாணிக்கவேலுக்கு சொந்தமானது என்று தெரிய வந்தது. இதையடுத்து ரெயில்வே போலீசார் கைத்துப்பாக்கியை பொன்மாணிக்க வேலுவிடம் ஒப்படைத்தனர்.
இந்த சம்பவம் காரணமாக ரெயில் நிலையத்தில் பரபரப்பு நிலவியது.