அதிகாரமற்ற இராஜாங்க அமைச்சுகளை வைத்து என்ன செய்ய முடியும் – இரா.துரைரெட்ணம்

247 0

பொருள் கொள்வனவிற்கே நாட்டில் நிதி இல்லாத நிலையில் அதிகாரமற்ற இராஜாங்க அமைச்சுகளை வைத்து என்ன செய்ய முடியும் என முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெட்ணம் கேள்வி எழுப்பியுள்ளார்.

மட்டக்களப்பு ஈ.பி.ஆர்.எல்.எப் பத்மநாபா மன்ற அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

“அண்மையில் வழங்கப்பட்ட புதிய அமைச்சரவை விடயத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் அரசாங்கத்தின் கொள்கைகளை ஏற்றுக் கொண்டு, அரசாங்கத்திற்குச் சார்பாகச் செயற்பட்ட  இரண்டு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அதிகாரம் குறைந்த, இராஜாங்க அமைச்சர் பதவியும், இந்த அரசாங்கத்தின் கொள்கையை எதிர்த்து இந்த அரசாங்கத்தை விமர்சித்து வந்த முஸ்லீம் காங்கிரஸ் நாடாளுமன்றம் உறுப்பினருக்கு அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சர் பதவியும் வழங்கி இந்த அரசாங்கம் இன்னும் இன்னும் தமிழர்களைக் கேலியாக்கியுள்ளது.

இவ்வாறாக அரசாங்கம் செயற்படுகையில் அதிகாரம் குறைந்த இராஜாங்க அமைச்சுப் பதவிகளைப் பெற்று இவர்கள் ஏன் அரசுக்கு முட்டுக் கொடுக்க வேண்டும் என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்திருக்கின்றது.

வடக்கைப் பொருத்தவரையில் யாழ்ப்பாணத்தில் அரசுக்குச் சார்பாகச் செயற்பட்ட தமிழ் நாடாளுமன்ற உறுப்பினருக்கு அதிகாரமுள்ள அமைச்சுப் பதவிகளை வழங்கியுள்ளார்கள்.

ஆனால், மட்டக்களப்பு மாவட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் மற்றும் சந்திரகாந்தன் ஆகியோர் இந்த அரசுக்குச் சார்பாகவே செயற்பட்டு வருகின்றனர். அரசின் கொள்கையை ஏற்றுக் கொண்டு நடைமுறைப்படுத்துவதில் இவர்கள் சார்ந்து நியாயப்பாடுகள் இருக்கலாம்.

ஆனால் தற்போது நாட்டில் ஏற்பட்டிருக்கும் இவ்வாறான பிரச்சினைகளின் போது குறிப்பாக சமூக நலன் தொடர்பாக எந்தவித தூரநோக்கும் இல்லாமல் எரிபொருள், எரிவாயு, பொருட்களின் விலையேற்றம் போன்ற விடயத்தில் இந்த அரசாங்கமும், ஆளுந்தரப்பு பிரதிநிதிகளும் எவ்வித கரிசனையும் காட்டவில்லை.

குறிப்பாக மடடக்களப்பு மாவட்டத்தில் இருக்கின்ற அரசு சார்பான நாடாளுமன்ற உறுப்பினர்கள் இவ்வாறு மக்கள் அவதியுறும் இந்த நிலையில், பொருட்களைக் கொள்வனவு செய்வதற்கே நாட்டில் பணமில்லாத இந்த நிலையில் அதிகாரம் குறைந்த இந்த இராஜாங்க அமைச்சுப் பதவிகளைப் பெற வேண்டுமா? இந்த நாட்டில் தற்போதைய நிலையில் அபிவிருத்திக்கென எந்த நிதியுமே இல்லை என்பது உலகத்திற்கே தெரியும்.

இவ்வாறு பிரயோசனமற்ற நிலையில் இவ்வாறான அமைச்சுகளை வைத்து என்ன செய்யப் போகின்றார்கள். இவர்கள் இதனைப் பொறுப்பெடுக்க வேண்டுமா? எனவே இந்த தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவரும் இந்தப் பொறுப்புகளை ஏற்றுக் கொள்வதா இல்லையா என அவர்கள் பரிசீலிக்க வேண்டும்.

அத்துடன் கடந்த இரண்டு வாரங்களுக்கு மேலாக இலங்கை அரசாங்கத்தின் செயற்பாடுகள் தொடர்பில் நாடு பூராகவும் மூவின மக்களும் ஜனநாயக ரீதியான போராட்டங்களை செயற்படுத்தி வருகின்ற வேளையில் நேற்றைய தினம் ரம்புகனையில் இடம்பெற்ற போராட்டத்தில் நிகழ்த்தப்பட்ட சம்பவத்தின் மூலம் ஒருவர் கொல்லப்பட்டதும் பலர் காயமுற்றிருபப்பதுமான விடயம் இந்தக் கொடுங்கோல் அரசாங்கம் ஜனநாயகத்திற்கு அடித்த சாவு மணியாகவே அமைகின்றது.

எனவே அந்தப் போராட்டத்தில் துப்பாக்கிச் சூட்டினை நடத்துவதற்கு உத்தரவிட்ட அதிகாரியும், துப்பாக்கிச்சூடு நடத்தியவர்களுக்கும் எதிராக இந்தப புதிய அமைச்சரவை சட்ட நடவடிக்கை எடுக்குமா என்ற கேள்விகளும் உள்ளன.

இவ்வாறான இந்தக் கொடுங்கோல் ஆட்சிக்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழ வேண்டும். கொடுங்கோலாட்சிக்கு முற்றுப் புள்ளி வைப்பதற்கு, அதிகாரங்களைப் நாடாளுமன்றத்திற்கு வழங்குவதற்கு முன்னெடுக்கப்பட்ட 19வது திருத்தச் சட்டத்தைப் மீள நாடாளுமன்றத்திற்குக் கொண்டு வந்து அதனை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு அனைத்து மக்கள் பிரதிநிதிகளும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்” என்று தெரிவித்தார்.