தென்மேற்கு மாநில குன்ஸ்ரெற்ரர் (Germany Hünstetten) அரங்கில் 32ஆவது அகவை நிறைவில் தமிழ்க் கல்விக் கழகம்

1761 0

தாயகனின் சிந்தனைக்குச் செயல்வடிவம் கொடுத்ததன் விளைவாக மொழியோடு கலை, பண்பாடு, விளையாட்டு எனப் பன்மைப் பரிமாணங்களினூடாகத் தமிழ்ச் சிறார்களை அணியப்படுத்தி ஆற்றலுடையாராய் வளர்த்தெடுப்பதை நோக்காக் கொண்டியங்கும் தமிழ்க் கல்விக் கழகம் 32ஆவது அகவை நிறைவுவிழாவைச் சிறப்போடு நடாத்திவருகின்றது. இவ்வாண்டும் ஐந்து அரங்குகளில் நடாத்துவதற்குத் திட்டமிட்டவாறு முதலாவது அரங்கம் மத்திய மாநிலத்தின் வெஸ்லிங் நகரிலே 09.04.2022 நடைபெற்றதைத் தொடர்ந்து தென்மேற்கு மாநிலத்திற்கான விழா குன்ஸ்ரெற்ரர் நகரில் 16.04.2022அன்று நிறைவுற்றது.

சிறப்புவிருந்தினர்களாக வருகைதந்த தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் யேர்மன் கிளைப் பொறுப்பாளர் மற்றும் மாநிலப் பொறுப்பாளர்கள், துணையமைப்புக்களான, யேர்மன் தமிழ்ப் பெண்கள் அமைப்பின் பொறுப்பளர், யேர்மன் தமிழ் இளையோர் அமைப்பின் பொறுப்பாளர் ஆகியோரோடு, தமிழ்க் கல்விக் கழகத்தின் துணைப்பொறுப்பாளர்கள், இளைய செயற்பாட்டாளர்களோடு, இணைந்து மங்கல விளக்கேற்றியதைத் தொடர்ந்து அகவணகத்தோடு அரங்க நிகழ்வுகள் தொடங்கின. தமிழ்க் கல்விக் கழகப் பொறுப்பாளர் திரு. செல்லையா லோகானந்தம் அவர்களின் வரவேற்புரைக்கு அமைவாகத் தமிழ்க் கல்விக் கழகத்தின் நோக்கமும், இளையோரின் பங்கேற்பும் ஒன்றித்தநிலையில் தென் மேற்கு மாநில இளையோர்களோடு நடுவச்செயலகத்தின் இளையோர்களும் இணைந்து விழாவை நடாத்தியமை சிறப்பு.

தேர்வு மதிப்பளிப்பு, தமிழ்த்திறன் மதிப்பளிப்பு என ஆற்றல் வளங்களின் அறுவடையாக அமைய, அந்த ஆற்றல்களை அணியமாக்கும் ஆசான்களின் பணியைப் போற்றும் வகையில் 5,10,15 ஆண்டுகள் பணிநிறைவிற்கான மதிப்பளிப்பும், 20ஆண்டுகள் பணிநிறைவிற்காக’தமிழ் வாரிதி’ மற்றும் 25 ஆண்டுகள் பணிநிறைவிற்காக ‘தமிழ் மாணி’ எனப் பட்டமளிப்புமாக அரங்கம் அணிசெய்ய, விழாவின் மகுடமாக முப்பது ஆண்டுகள் தமிழ்ப் பணியாற்றியமைக்கான மதிப்பளிப்பு அமைந்தது. அந்த மதிப்பேற்பை முன்னாள் தென்மேற்கு மாநிலச் செயற்பாட்டாளரும், கொம்பூர்க் தமிழாலய நிர்வாகியுமான திரு. சின்னத்துரை யோகலிங்கம் அவர்களும், சுள்ஸ்பாக் தமிழாலய ஆசிரியை திருமதி புஸ்பராணி தேவகுமார் அவர்களும் பெற்றுக்கொண்டனர். முப்பது ஆண்டு யேர்மனியில் தமிழ்ப் பணியைச் சுட்டும் வகையில் மூன்று உடுகள் பொறிக்கப்பட்ட பதக்கம் தமிழ்க் கல்விக் கழகத்தால் சிறப்பாக அணிவிக்கபட்டது. தமிழாலயக் குடும்ப உறவுக்குக் கிடைத்த மதிப்பளிப்பைத் தமக்குக் கிடைத்ததுபோல் வாழ்த்துமடல் மலர்கொத்து என வழங்கி அரங்கிலே கொண்டாடி மகிழ்ந்தனர்.

வேற்றுமொழிச் சூழலுள் வாழ்கின்றபோதும், தமது பிள்ளைகளைத் தமிழோடு பயணிக்கச் செய்யும் வகையிற் தமிழ்ப் பெற்றோரின் அயராத முயற்சியோடு, ஆசான்களின் ஒருங்கிணைந்த முயற்சியின் பயனாக ஆண்டு 12வரை தமிழாலயங்களில் கற்றலை நிறைவுசெய்தோருக்கான மதிப்பளிப்புத் தமிழ்க் கல்விக் கழகத்தின் மற்றொரு பரிமாணமாய் இருந்தது. இந்த மாணவர்களை நோக்கி ‘தமிழ்த் தேசியத்திற்காகவும், தேசத்திற்காவும் என்ன செய்யப் போகின்றோம்! என்று தமிழ் இளையோர் அமைப்பின் பொறுப்பாளர் செல்வி அஞ்சனா பகீதரன் அவர்கள் தனது உரையிலே வினவியமையையும் அவதானிக்க முடிந்தது.

அகவை நிறைவுவிழாவின் முத்தாரமாய் தமிழாலயக் குடும்பம் ஒன்றுகூடி முயற்சியும், பயிற்சியுமாக ஒன்றிணைந்து உழைத்ததன் அறுவடையாகத் தமிழ்த் திறன், தேர்வு, கலைத்திறன் எனத் தமிழாலயங்கள் வெற்றிக்கனிகளைத் தமதாக்கியதன் பயனாகச் சிறப்பு மதிப்பளிப்புகள் வழங்கப்பட்டன. கலைத்திறன் போட்டியிலே மாநில மட்டத்தில் முறையே முதல் மூன்று நிலைகளைத் தமிழாலயம் பாட்சுவல்;பாக், தமிழாலயம் பென்ஸ்கைம், தமிழாலயம் நொய்ஸ்ரட் வைன்ஸ்ராச ஆகியனவும், நாடு தழுவிய மட்டத்தில் தமிழாலயம் பாட்சுவல்;பாக் இரண்டாம் நிலையைப் பெற்றமைக்குமெனத் தனித்துவமாக மேடைக்குத் தமிழாலயங்கள் அணி அணியாக வருகைதந்து தங்கள் மகிழ்வுகளைக் கொண்டாடியதோடு மதிப்பேற்பையும் பெற்றுக்கொண்டனர். வெற்றிபெற்ற தமிழாலயங்களுக்குப் பிரிவுசார் பொறுப்பாளர்களின் வாழ்த்துரைகளோடு, தமிழ்க் கல்விக் கழகப் பொறுப்பாளரின் வாழ்த்துரையும் இடம்பெற்றது.

நிறைவாக விழாவை சிறப்பாக நடாத்திய இளையோருக்கான மதிப்பளிப்போடு, நன்றியுரையைத் தொடர்ந்து நம்புங்கள் தமிழீழம் என்ற தமிழினத்தின் நம்பிக்கையைத் தொட்டவாறு நிறைவுற்றதோடு, எதிர்வரும் வாரங்களில்(23.04, 30.04.2022) வட மற்றும் தென் மானிலங்களுக்கான விழாகள் முறையே கொற்றிங்கள், ஸ்ருட்காட் நகரங்களில் நடைபெற உள்ளமை குறிப்பிடத்தக்கது.