ஆளுநர் தன்னிச்சையாக முடிவெடுக்கும் அதிகாரம் படைத்தவர் அல்ல. ஆனால், குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்ப கடமைப்பட்டவர் என திருமாவளவன் கூறியுள்ளார்.பெரம்பலூர் மாவட்டம் பாடாலூரில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து இன்று காலை விமானம் மூலம் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் திருச்சி வந்தார். அப்போது திருச்சி விமான நிலையத்தில் அவர் நிருபர்களை சந்தித்தார்.அப்போது கவர்னர் நீட் அறிக்கையை குடியரசு தலைவருக்கு அனுப்ப முடிவு செய்துள்ளதாகவும், அனுப்பி விட்டதாகவும் பரவலாக ஒரு செய்தி வருகிறது என்பது குறித்து கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த திருமாவளவன் கூறியதாவது:-
தமிழக அரசு சட்டமன்றத்தில் நிறைவேற்றிய நீட் விலக்கு மசோதா ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டு கிடப்பில் உள்ளது. அதை அவர் இன்னும் அனுப்பவில்லை என்பதால் தான் அவருடைய தேனீர் விருந்து அழைப்பை ஏற்கவில்லை, புறக்கணிக்கப்பட்டது. அதிகாரப்பூர்வமாக அவர் இன்னும் குடியரசு தலைவருக்கு அனுப்பியதாக தெளிவு இல்லை.
இந்த நிலையில் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி விட்டது போல தகவல்களை சிலர் பரப்புகின்றனர். அது உண்மையாக இருந்தால் மகிழ்ச்சி. தி.மு.க.வைச் சார்ந்த அமைச்சர்கள் ஆளுனரை சந்தித்து இது குறித்து பேசியபோது, எப்போது அனுப்பப்படும் என்பதை சொல்ல இயலாது என்று மறுத்ததாக தகவல் தெரிகிறது. அவர் இதுவரை நிறைவேற்றப்பட்ட 11 மசோதாக்களை அனுப்பவில்லை என்றும், தி.மு.க. தரப்பில் சொல்லப்படுகிறது.
ஆளுநர் தன்னிச்சையாக முடிவெடுக்கும் அதிகாரம் படைத்தவர் அல்ல. ஆனால், குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்ப கடமைப்பட்டவர்.
முதல்வர் ஆளுநருக்கு கட்டுப்பட்டவர் என்று வலதுசாரி இயக்கங்கள் கூறுகின்றன. முதல்வர் மக்களுக்கு கட்டுப்பட்டவர், ஆளுநர் இந்திய மத்திய அரசின் பிரதிநிதி அவ்வளவுதான். அதனால் தான் தி.மு.க. ஆட்சிக்கு வந்த காலத்திலிருந்து ஆளுநர் பதவியே தேவையில்லை என்று பேசி வருகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.

