70 சதவீத நிதி உதவி வாக்குறுதியை அமித்ஷா அறிவிக்க வேண்டும்: வைத்திலிங்கம் எம்.பி. வலியுறுத்தல்

236 0

70 சதவீத நிதி உதவி வாக்குறுதியை அமித்ஷா அறிவிக்க வேண்டும் என்று வைத்திலிங்கம் எம்.பி. வலியுறுத்தியுள்ளார்.

புதுவை காங்கிரஸ் எம்.பி. வைத்திலிங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

புதுவை யூனியன் பிரதேசம் மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ளதால் மத்திய அரசின் நிதி உதவியையே  அதிகம் நம்பி உள்ளது.

இதனால் பிரதமர், உள்துறை அமைச்சர், நிதி அமைச்சர் ஆகியோரை அடிக்கடி சந்தித்து புதுவையின் தேவைகள் குறித்து ஞாபகப்படுத்தி, கேட்டுப்பெற வேண்டிய அவசியமான நிலை இருந்து வருகிறது.
ஆனால்  முதல்அமைச்சர் ரங்கசாமி டெல்லி செல்லவே தயங்கி வருகிறார். ஆட்சிக்கு வந்து ஓராண்டு நிறைவடையும் நிலையிலும் கூட இதுவரை ரங்கசாமி டெல்லி சென்று புதுவையின் தேவைகள் குறித்து பிரதமர், மத்திய அமைச்சர்களை சந்தித்து வலியுறுத்தவில்லை.
அதேசமயம் மத்தியில் உள்ள ஆட்சியாளர்கள் தேர்தலின்போது கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றாமல் இருந்து வருகின்றனர்.
மத்திய மந்திரி அமித்ஷா வருகிற 24-ந் தேதி புதுவை வரவுள்ளார். அவரிடம் புதுவை பா.ஜ.க.வினர் தேர்தல் அறிவிப்புகள் அனைத்தையும் நிறைவேற்ற  வலியுறுத்த வேண்டும். அமித்ஷாவும் வாக்குறுதிகளை நிறைவேற்ற தனக்கும் பங்கும், கடமையும் உள்ளது என்பதை உணர்ந்து நிறைவேற்ற முன்வர வேண்டும்.
குறைந்தபட்சம் புதுவைக்கு தனி தேர்வாணையம், மத்திய அரசின் நிதி உதவியை 70 சதவீதமாகவும் உயர்த்துவது ஆகிய 2 அறிவிப்புகளையாவது நிறைவேற்ற வேண்டும்.
இவ்வாறு வைத்திலிங்கம் எம்.பி. அறிக்கையில் கூறியுள்ளார்.