விலை அதிகரிப்பு, பண வீக்கம் என்பன அரசாங்கம் உருவாக்கிய நெருக்கடிகள்

317 0

நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகள் அரசாங்கம் உருவாக்கிய நெருக்கடிகள் என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

நிதியமைச்சரும், ஜனாதிபதியும் இலங்கை மத்திய வங்கிக்கு வழங்கிய உத்தரவுகளே நெருக்கடிகள் உருவாக காரணமாக அமைந்தன எனவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

பணத்தை அச்சிட்டது நாட்டில் ஏற்பட்டுள்ள பண வீக்கத்திற்கு காரணம் என இலங்கை மத்திய வங்கியின் புதிய ஆளுநர் தெரிவித்துள்ளார். பொருட்களின் விலை அதிகரிப்பது இயற்கை அனர்த்தமா?.

நிதியமைச்சரும், ஜனாதிபதியும் மத்திய வங்கிக்கு வழங்கிய விசேட உத்தரவுகள் காரணமாகவே இந்த நெருக்கடி நிலைமை உருவாகியது. தற்போது பொருட்களின் விலைகள் அதிகரிப்பது, பண வீக்கம் உயர்ந்தமை என்பன அரசாங்கம் உருவாக்கிய நெருக்கடி.

டொலரின் பெறுமதியை 203 ரூபாவுக்குள் கட்டுப்படுத்தி வைத்திருக்க கப்ரால் எப்படியான விடயங்களை முன்வைத்து வந்தார். டொலரின் பெறுமதியை 203 ரூபா என்ற மட்டத்தில் வைத்திருக்க மத்திய வங்கியின் கையிருப்பில் இருந்த பெருந்தொகையான பணத்தை சந்தைக்குள் புழங்கவிட்டனர்.

ஐந்தரை பில்லியன் டொலர்கள் சந்தைக்கு திறந்து விடப்பட்டதாக பொருளியல் நிபுணர்கள் கூறுகின்றனர். இவ்வாறு செய்து மத்திய வங்கியின் கையிருப்பில் இருந்த அந்நிய செலாவணியை பூஜ்ஜியமாக்கினர்.

மத்திய வங்கியில் இருந்த டொலர் கையிருப்பை பூஜ்ஜியமாக மாற்றிய பின்னர், டொலரை மிதக்க விட்டனர். இது சரியாக கப்ரால் சாரத்தை கட்டிக்கொண்டு தலைகீழாக நின்றது போன்ற செயல். இதற்கு அரசாங்கம் பொய்யான விளக்கங்களை வழங்கியது.

நெருக்கடி எதுவுமில்லை அரசிடம் தேவைக்கு அதிகமாக நிதி இருப்பதாக ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ கூறினார். தேவைக்கு அதிகமாக எரிபொருள் இருக்கின்றது, அனுப்பி வைக்கப்படும் எரிபொருள் கொள்லன்கள், எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இடமில்லாத காரணத்தினால், திரும்பி வருவதாக காமினி லொக்குகே கூறினார்.

செவ்வாய் கிரகத்தில் அவை நடந்தனவா?. நிதியமைச்சர் பசில் ராஜபக்ச இந்தியாவில் இருந்து வந்த போது விமான நிலையத்தில் செய்தியாளர்கள் பொருளாதார நெருக்கடி பற்றி கேட்ட போது, பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம் எனக் கூறினார்.

புதிய அமைச்சரவை நியமிக்கப்பட்ட பின்னர் இரவு 12 மணிக்கு செய்தி வருகிறது. டீசல் 113 ரூபாவால் அதிகரித்துள்ளது என்றும் பெட்ரோல் 84 ரூபாவால் அதிகரித்துள்ளது என்றும் செய்தி வருகிறது. இவற்றை மக்கள் ஏற்றுக்கொள்வார்களா? எனவும் அனுரகுமார திஸாநாயக்க கேள்வி எழுப்பியுள்ளார்.