மக்கள் இனிமேல் ஒருபோதும் இனவாத கருத்துக்களுக்கு அடிபணிந்து ஏமாற தயாரில்லை: எம்.எம் நசுருதீன்

135 0

இந்த நாட்டின் பெரும்பான்மை இன மக்கள் இனிமேல் ஒருபோதும் இனவாத கருத்துக்களுக்கு அடிபணிந்து ஏமாந்து போகத் தயாரில்லை என கிண்ணியா நகரசபை உறுப்பினர் எம்.எம் நசுருதீன் தெரிவித்துள்ளார்.

அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

குறித்த  அறிக்கையில் மேலும்,

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும் 225 நாடாளுமன்ற உறுப்பினர்களும் பதவி விலகக் கோரி காலிமுகத்திடலில் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் தொடரும் மக்கள் எழுச்சிப் போராட்டத்தை, நாட்டை முடக்கி இனவாதக் கருத்துக்களைத் தூண்டி மக்களுக்கிடையில் பிளவுகளை ஏற்படுத்தி மழுங்கடிக்கச் செய்வதில் அரசாங்கம் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றது.

அன்மையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் மிரிகானை வீட்டிற்கு முன்பாக மக்கள் எழுச்சி நடைபெற்றபோது அராபிய வசந்தம் என்ற சொற்பிரயோகம் பாவிக்கப்பட்டதால் இது முஸ்லிம் அடிப்படைவாதிகளின் செயல் என ஜனாதிபதி செயலக ஊடக அறிக்கையில் வெளியிடப்பட்டிருந்தது.

அதேபோன்று காலிமுகத்திடலில் நடைபெற்று வருகின்ற மக்கள் எழுச்சி போராட்டத்தின்போது கலந்துகொண்ட முஸ்லிம் மக்கள் நோன்பு திறப்பதையும் தொழுகையில் ஈடுபடுவதையும் அவதானித்த ஞானசார தேரர் இங்கே வகாபிசம், jamaat-e-islami போன்ற தீவிரவாத அமைப்புகள் களம் இறங்கியிருக்கிறார்கள் என்று இனவாத கருத்துக்களைத் தூண்டி இந்த மக்கள் எழுச்சி போராட்டத்திற்கு இனவாத சாயம் பூசி மழுங்கடிப்பதற்கான முயற்சி ஒன்று மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ஆனால் மக்கள் ‘கோட்டா கோகோம்’ என்ற மகுட வாசத்தின் கீழ் இன, மத, மொழி வேறுபாடுகளுக்கப்பால் இலங்கையர் என்ற ஒரே நாமத்தின் கீழ் மிகப்பலமாக கைகோர்த்து நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள மின்வெட்டு, எரிபொருள், எரிவாயு, அத்தியாவசியப் பொருட்கள் அனைத்துக்குமான விலையேற்றமும் தட்டுப்பாடும் அனைத்து மக்களையும் வீதிக்கு இறக்கி அரசாங்கத்திற்கு எதிராகப் போராட வைத்துள்ளது.

ராஜபக்சவின் ஊழல் மோசடியை அறிந்த மக்கள் இன்று ராஜபக்சக்கள் நாட்டை விட்டு வெளியேறுமாறு கோசம் எழுப்பிக் கொண்டிருக்கின்ற காட்சியைக் காண்கின்றோம்.

தற்போது நாட்டு மக்கள் பசி, பட்டிணியினால் கஷ்டப்படுவதையும் பொருட்களைப் பெற்றுக் கொள்வதில் வரிசையாக நின்று கஷ்டப்படுவதையும் அரசாங்கம் ஒரு முடிவுக்குக் கொண்டு வருவதற்கும் பதிலாக வேடிக்கை பார்த்துக் கொண்டே இருக்கிறது.

இனவாத கருத்துக்களைப் பரப்புவது வேடிக்கையாக இருக்கிறது, இந்த நாட்டின் பெரும்பான்மை இன மக்கள் இனிமேல் ஒருபோதும் இனவாத கருத்துக்களுக்கு அடிபணிந்து ஏமாந்து போகத் தயாரில்லை.

‘கோட்டா கோகோ’ என்ற குடையின் கீழ் பௌத்தம், இஸ்லாம், இந்து, கிறிஸ்தவம் என்ற இன மத மொழிகளுக்கு அப்பால் இலங்கையர் என்ற உணர்வோடு ஊழல் மோசடிக்கு எதிராக நாட்டின் எதிர்கால நலனுக்காகப் பலமாக கை கோர்த்துப் போராடிக் கொண்டிருக்கின்றார்கள்” இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.