பங்குச்சந்தையை மூடுவதற்கான தீர்மானம் குறித்து வர்த்தக சம்மேளனம் விசனம்

247 0

பங்குசந்தையை ஐந்து நாட்களுக்கு மூடுவதற்கு மேற்கொண்டிருக்கும் தீர்மானமானது உலகளாவிய ரீதியிலுள்ள முதலீட்டாளர்களுக்குத் தவறான சமிக்ஞையை வழங்கும் என்று சுட்டிக்காட்டியுள்ள இலங்கையின் வர்த்தக சம்மேளனம் தற்போதைய சவாலான சூழ்நிலைக்கு மத்தியிலும் பங்குச்சந்தையை சுதந்திரமாகவும் முதலீட்டாளர்களுக்கு நேயமான முறையிலும் செயற்பட அனுமதிப்பதன் மூலம் அதன் நன்மதிப்பைப் பாதுகாக்கவேண்டியது அவசியம் என்றும் வலியுறுத்தியுள்ளது.

நாடு தற்போது முகங்கொடுத்திருக்கும் அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடி நிலையைக் கருத்திற்கொண்டு கொழும்பு பங்குச்சந்தையைத் தற்காலிகமாக 5 நாட்கள் மூடுவதற்குத் தீர்மானித்திருப்பதாக பிணையங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழு கடந்த சனிக்கிழமை அறிவித்தது.

இதுகுறித்து கரிசனையை வெளிப்படுத்தி பிணையங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழுவின் தலைவர் விராஜ் தயாரத்னவிற்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்திலேயே வர்த்தக சம்மேளனம் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளது.

அக்கடிதத்தில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது,

இவ்வாரம் திங்கட்கிழமையிலிருந்து 5 நாட்களுக்கு கொழும்புப் பங்குச்சந்தையை மூடுவதற்கு நீங்கள் மேற்கொண்டிருக்கும் தீர்மானம் குறித்து எமது கரிசனையை வெளிப்படுத்துகின்றோம்.

நாம் ஏற்கனவே சுட்டிக்காட்டியிருந்தவாறு, கொரோனா வைரஸ் பரவல் தொற்றுப்பரவலின்போது கொழும்புப் பங்குச்சந்தை சடுதியாக மூடப்பட்டதன் காரணமாக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் பல்வேறு சவால்களுக்கு முகங்கொடுக்கவேண்டிய நிலையேற்பட்டது.

குறிப்பாக அக்காலப்பகுதியில் தகுதிவாய்ந்த முதலீட்டாளர்கள் சிலர் பங்குச்சந்தையில் நிலைத்திருப்பதிலும் தமது விருப்பத்திற்கு அமைவாகப் பங்குகளின் விலைகளைத் தீர்மானிப்பதிலும் சிக்கல்களை எதிர்கொண்டனர்.

மேலும் சில முதலீட்டாளர்கள் பங்குகளைக் கொள்வனவு செய்வதிலும் அவற்றுக்கான விலைகளை நிர்ணயிப்பதிலும் நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்தனர். அதன்படி அனைத்து முதலீட்டாளர்களும் தமது முதலீட்டு நடவடிக்கைகளை உரியவாறு முன்னெடுத்துச்செல்லமுடியாத நிலைக்குத் தள்ளப்பட்டனர்.

இவ்வாறானதொரு பின்னணியில் தற்போது உலகளாவிய ரீதியிலுள்ள முதலீட்டாளர்களுக்குத் தவறான சமிக்ஞையைக் காண்பிக்கும் வகையில், பங்குச்சந்தையை மூடவேண்டிய அவசியம் இல்லை என்று நாங்கள் கருதுகின்றோம்.

இந்த நடவடிக்கையானது சந்தை அழுத்தங்களுக்கு எதிராக நாணயமாற்றுவீதத்தை நிலையான மட்டத்தில் பேணுவதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சியாகவே முதலீட்டாளர்களால் நோக்கப்படும்.

ஆகவே இத்தீர்மானம் குறித்து மீளச்சிந்திக்குமாறு வலியுறுத்தும் அதேவேளை, தற்போதைய சவாலான சூழ்நிலைக்கு மத்தியிலும் பங்குச்சந்தையை சுதந்திரமாகவும் முதலீட்டாளர்களுக்கு நேயமான முறையிலும் செயற்பட அனுமதிப்பதன் மூலம் அதன் நன்மதிப்பைப் பாதுகாக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம் என்று அக்கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.