ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு எதிராக கொண்டுவர தீர்மானித்திருக்கும் நம்பிக்கையில்லா பிரேரணைக்கு பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்பட தீர்மானித்துள்ள அணி இரண்டு நிபந்தனைகளுடன் ஆதரவளிக்க தயார் என பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்பன்பில தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு எதிராககொண்டுவரும் நம்பிக்கையில்லா பிரேரணை மற்றும் ஜனாதிபதிக்கு எதிரான குற்றப்பிரேரணைக்கு ஆதரவளிப்பது தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
<p>இதுதொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,
அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவளிக்குமாறு பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்பட தீர்மானித்திருக்கும் குழுவிடம் ஐக்கிய மக்கள் சக்தி கோரி கேட்டுக்கொண்டிருந்தது. இதுதொடர்பாக எமது சுயாதீன குழு கலந்துரையாடி தீர்மானம் ஒன்றை எடுத்திருக்கின்றோம்.
அதன் பிரகாரம் இரண்டு நிபந்தனைகளுடன் பிரேரணையை ஆதரிக்க நாங்கள் தயாராக இருக்கின்றோம். விசேடமாக ஐக்கிய மக்கள் சக்தி கொண்டுவரும் அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை, அரசாங்கத்தின் வெற்றியாகப்போவதில்லை என்பதை உறுதிப்படுத்துவதற்கு, பாராளுமன்றத்தில் 113 உறுப்பினர்களின் ஆதரவு இருப்பதை உறுதிப்படுத்தவேண்டும் என்பது முதலாவது நிபந்தனையாகும்.
அடுத்ததாக நம்பிக்கையில்லா பிரேரணையில் அரசாங்கம் தோல்வியடைந்த பின்னர், அமைக்கப்படும் இடைக்கால சர்வ கட்சி அரசாங்கத்துக்கு ஆதரவளிப்பதாகும். ஏனெனில் 118 உறுப்பினர்களுடன் அரசாங்கம் தற்போது செய்வதறியாது தவிர்த்துக்கொண்டிருக்கின்றது.
இந்நிலையில் நம்பிக்கையில்லா பிரேரணையை அரசாங்கம் தோற்கடித்தால், அரசாங்கம் மீண்டும் சக்திபெறும். அதனால் நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்றை கொண்டுவரும்போது அதனை நம்பிக்கையுடன் கொண்டுவரவேண்டும் என்றார்.

