கவுகாத்தியில் இருந்து விமானம் மூலம் சென்னைக்கு கொண்டு வரப்பட்ட விஷ்வா உடல், அண்ணா நகரில் உள்ள அவரது வீட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டது.
சென்னை அண்ணா நகரை சேர்ந்தவர் விஷ்வா தீனதயாளன் (வயது 18), சென்னை லயோலா கல்லூரியில் பி.காம் படித்து வந்தார்.
தமிழக டேபிள் டென்னிஸ் வீரரான விஷ்வா, மேகாலயா மாநிலத்தில் நடைபெறும் 83-வது சீனியர் டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்துகொள்ள சென்றிருந்தார்.
கவுகாத்தியில் இருந்து ஷில்லாங்கிற்கு சக வீரர்களுடன் அவர் காரில் சென்றபோது லாரி ஒன்று கார் மீது மோதியது. இந்த விபத்தில் விஷ்வா, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்தநிலையில் பலியான விஷ்வா உடல், கவுகாத்தியில் இருந்து விமானம் மூலம் சென்னைக்கு கொண்டு வரப்பட்டது. அவரது உடலை தமிழக வெளிநாட்டு வாழ் தமிழர் நலன் துறை துணை கமிஷனர் ரமேஷ் மற்றும் அதிகாரிகள் பெற்றுக் கொண்டனர்.
பின்னர் வேன் மூலம் சென்னை அண்ணா நகரில் உள்ள விஷ்வா வீட்டுக்கு உடலை கொண்டு சென்றனர். அங்கு விஷ்வா உடலுக்கு அரசு சார்பில் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் மெய்யநாதன் நேரில் அஞ்சலி செலுத்தினார்.
அண்ணாநகர் எம்.எல்.ஏ. மோகன், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை முதன்மை செயலாளர் அபூர்வா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் ஆனந்தகுமார் மற்றும் அலுவலர்கள் அஞ்சலி செலுத்தினார்கள்.

