உயிர்த்த ஞாயிறு தின தற்கொலை குண்டு தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டு எதிர்வரும் 21 ஆம் திகதியுடன் 3 ஆண்டுகள் நிறைவடையவுள்ள நிலையில் , தாக்குதல்களால் பாதிக்கப்பட்ட சிலர் தமக்கான நியாயத்தைக் கோரி இன்று கொழும்பில் வித்தியாசமான முறையில் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
6 பெண்களும் , இளைஞர் ஒருவரும் இறந்தவர்களைப் போன்று ஆடையணிந்து , கருப்பு நிற பதாதையொன்றில் ‘நீதிக்காக’ என்று எழுதி அதனை ஆடை மீது அணிந்து கொண்டு இவ்வாறு எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இவ்வாறு நடவடிக்கையில் ஈடுபட்டவர்கள் தமது பெயர்களையும் குறித்த பதாதையில் எழுதி , பிறந்த தினம் மற்றும் இறந்த தினத்தை 2019 ஏப்ரல் 21 என்று குறிப்பிட்டிருந்தனர்.
கொழும்பில் இவ்வாறு ஆடைந்து நடந்து கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்னபாக அமர்ந்து எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர் .
பின்னர் அவர்கள் அங்கிருந்து காலி முகத்திடலுக்குச் சென்றனர். அங்கு ஜனாதிபதி செயலக வளாகத்தில் கொல்லப்பட்ட மற்றும் காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நியாயம் கோரி , வைக்கப்பட்டிருந்த பதாதைகளுக்கு முன்னாள் எதிர்ப்பினை வெளிப்படுத்திமை குறிப்பிடத்தக்கது.
இன்றைய தினம் உலகளாவிய ரீதியிலுள்ள கத்தோலிக்க மக்கள் உயிர்த்த ஞாயிறு தினத்தை கொண்டாடிய நிலையில் , இலங்கையில் கடந்த 2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தினத்தன்று தற்கொலை குண்டு தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்ட கொழும்பு – கொச்சிக்கடை புனித அந்தோனியார் திருத்தலம் , நீர்கொழும்பு – கட்டுவாப்பிட்டி தேவாலயம் மற்றும் மட்டக்களப்பு சியோன் தேவாலயம் உள்ளிட்டவற்றில் விசேட ஆராதனைகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

