பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவி விலக வேண்டும் – அத்துரலியே ரத்ன தேரர்

158 0

மகாசங்கத்தினரது ஆலோசனைகளுக்கு மதிப்பளித்து பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவி விலக வேண்டும்.
காலி முகத்திடலில் தொடர் போராட்டத்தில் ஈடுபடும் இளைஞர்களின் கோரிக்கைக்கு அரசாங்கம் மதிப்பளிக்காவிடின் அது பாரிய விளைவுகளை ஏற்படுத்தும் என பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்ன தேரர் தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

அரசாங்கத்தின் தவறான பொருளாதார முகாமைத்துவ கொள்கையினால் நாட்டு மக்கள் பாரிய நெருக்கடிகளை எதிர்க்கொண்டுள்ளார்கள்.

சுபீட்சமான எதிர்கால கொள்கைக்கு முரணாக செயற்பட்டதன் விளைவை அரசாங்கம் தற்போது எதிர்க்கொள்கிறது.
அரசியல் மற்றும் சமூக கட்டமைப்பில் தோற்றம் பெற்றுள்ள பிரச்சினைக்கு பாராளுமன்ற மட்டத்தில் தீர்வு காண முடியாமல் இருப்பதற்கு அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தம் பிரதான தடையாக உள்ளது.

இடைக்கால அரசாங்கத்தின் ஊடாக 20 ஆவது திருத்தத்தை நீக்கி 21ஆவது திருத்தத்தை கொண்டு வருவதற்காகவே இடைக்கால அரசாங்கத்தை அமைக்குமாறு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.

புதிய பிரதமர் தலைமையில் இடைக்கால அரசாங்கம் அமைக்கப்பட வேண்டும் என்பதையும், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவி விலக வேண்டும் என்பதையும் மகாசங்கத்தினர் தொடர்ந்து வலியுறுத்தியுள்ளார்கள் .மகாசங்கத்தினரது ஆலோசனைக்கு மதிப்பளித்து பிரதமர் பதவி விலக வேண்டும்

காலி முகத்திடலில் தொடர் போராட்டத்தில் ஈடுபடும் இளம் தலைமுறையினரது கோரிக்கைக்கு அரசாங்கம் மதிப்பளிக்க வேண்டும்.

மக்கள் கருத்துக்கு  மதிப்பளிக்காமல் செயற்பட்டால் அது பாரதூரமான  விளைவுகளை ஏற்படுத்தும்.
மக்களின் ஜனநாயக போராட்டம் இறுதியில் இராணுவ போராட்டமாக மாற்றமடையுமா என்ற அச்சம் காணப்படுகிறது என்றார்