தமிழக உள்ளாட்சி தேர்தலை தள்ளி வைக்க ஆளும்கட்சி முயற்சிப்பதாக துரைமுருகன் குற்றம் சாட்டினார்.
வேலூரில் உள்ள தி.மு.க. மத்திய மாவட்ட அலுவலகத்தில் அவசர கூட்டம் இன்று நடந்தது. மத்திய மாவட்ட செயலாளர் ஏ.பி.நந்தகுமார் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். கார்த்திகேயன் எம்.எல்.ஏ., முன்னாள் எம். பி. முகமது சகி உள்பட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சரும், முதன்மை செயலாளரான துரைமுருகன் கலந்து கொண்டார். கூட்டத்தில், தி.மு.க. செயல் தலைவராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்று முதல் முறையாக வேலூருக்கு வரும் 31-ந் தேதி வரவுள்ளார். அவருக்கு மத்திய மாவட்ட தி.மு.க. சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டும்.
ஜல்லிக்கட்டுக்காக அறவழியில் போராட்டம் நடத்திய மாணவர்கள், இளைஞர்களை கடுமையாக தாக்கிய காவல்துறைக்கு கண்டனம் தெரிவிப்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இதையடுத்து, தி.மு.க. முதன்மை செயலாளர் துரைமுருகன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழக உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடத்த ஐகோர்ட்டு உத்தரவிட்டது. ஆளும்கட்சி தேர்தலை தள்ளி வைக்க முயற்சிக்கிறது. இது தொடர்பான வழக்கில் உள்ளாட்சி தேர்தல் குறித்து வரும் 31-ந் தேதி தெரிவிக்க ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.
காட்பாடி டெல் வெடி மருந்து தொழிற்சாலையில் கடந்த 6 மாதங்களாக தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்கவில்லை. சட்டசபையில் நான் கேள்வி எழுப்பியதால், நேற்றிரவே 2 மாத சம்பளத்தை வழங்கி விட்டனர்.
மீதமுள்ள நிலுவை தொகையை விரைவில் வழங்குவதாகவும் அறிவித்து உள்ளனர். டெல் வெடி மருந்து தொழிற்சாலையை தனியாருக்கு விட்டால், தி.மு.க. சார்பில் வழக்கு தொடரப்படும். போராட்டம் நடத்தப்படும்.
பவானி ஆற்றின் குறுக்கே கேரள அரசு தடுப்பணை கட்டுவதை தடுத்து நிறுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக முதல்-அமைச்சர் மற்றும் அமைச்சர்கள் அண்டை மாநில அரசுகளுடன் பேசி பிரச்சினைகளை தீர்க்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

