ரெயில் மோதி யானைகள் உயிரிழக்கும் விவகாரம்: ரெயில்வே தண்டவாள பகுதியில் ஐகோர்ட் நீதிபதிகள் குழு ஆய்வு

276 0

யானைகள் மோதி உயிரிழந்த பகுதியான வாளையார்-மதுக்கரை இடையே உள்ள ரெயில்வே தண்டவாள பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர்.

கோவை- பாலக்காடு இடையே வாளையார் பகுதியில் யானைகள் ரெயில் மோதி உயிரிழந்து வந்தன. இதனை தடுக்கவும், யானைகள் கொல்லப்படுவதை தடுக்கவும் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
வழக்கை விசாரித்து வரும் நீதிபதிகள் வி.பாரதிதாசன், என்.சதீஷ்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு வனவிலங்குகள் பாதுகாப்பு தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் தொடர்பாக ஆய்வு மேற்கொள்ள இருப்பதாக அறிவித்தனர்.
இன்று காலை சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள் சுப்பிரமணியன், சதீஷ்குமார், இளந்திரையன் ஆகிய 3 பேர் குழுவினர் கோவை வந்தனர். அவர்கள் யானைகள் மோதி உயிரிழந்த பகுதியான வாளையார்-மதுக்கரை இடையே உள்ள ரெயில்வே தண்டவாள பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர்.
இவர்களுடன் காலநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் துறை கூடுதல் தலைமை செயலாளர் சுப்ரியா சாகு, கோவை மாவட்ட கலெக்டர் சமீரன், வனத்துறையினரும் வந்தனர்.
அப்போது ஐகோர்ட்டு நீதிபதிகள் யானைகள் ரெயில் மோதி உயிரிழப்பதை தடுக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து வனத்துறையினர் மற்றும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தனர்.
முன்னதாக போத்தனூர் ரெயில் நிலையத்திற்கு வந்த ஐகோர்ட்டு நீதிபதிகள் குழுவினர், அங்கு ரெயிலில் உள்ள என்ஜின் பெட்டியில் ஏறி ஆய்வு செய்தனர். அப்போது ரெயில் எவ்வளவு வேகத்தில் இயக்கப்படுகிறது என்பது உள்பட பல்வேறு விவரங்களை கேட்டு தெரிந்து கொண்டனர்.