ஜனாதிபதியை பதவி விலகுமாறு கோரி 3 ஆவது நாளாக தொடரும் போராட்டம் ! கூடாரங்கள், மலசலகூட வசதிகள் தயாரில் !

322 0

கொழும்பு காலிமுகத்திடல் பகுதியில் அமைந்துள்ள ஜனாதிபதி செயலகத்திற்கு முன் கொட்டும் மழையிலும் இரவோடு இரவாக இன்று திங்கட்கிழமை 3 ஆவது நாளாகவும் மக்கள் எழுச்சிப் போராட்டம் தொடர்ந்த வண்ணமுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட முழு அரசாங்கமும் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தியும் , நாட்டு மக்கள் எதிர்கொண்டுள்ள நெருக்கடிகளுக்கு துரித தீர்வு வழங்கப்பட வேண்டும் என்று தெரிவித்து நாடளாவிய ரீதியில் கடந்த இரு வாரங்களாக முன்னெடுக்கப்பட்டு வரும் ஆர்ப்பாட்டங்கள் நாளுக்கு நாள் வலுப்பெற்று வருகின்றன.

ஆரம்பத்தில் பொது மக்கள் மாத்திரம் இந்த அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வந்த நிலையில் , தற்போது , மதத் தலைவர்கள் , சட்டத்தரணிகள், நிபுணர்கள் உள்ளிட்ட பல தரப்பினராலும் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அதற்கமைய கடந்த சனிக்கிழமை (9) காலை 8.30 மணிமுதல் கொழும்பு – காலி முகத்திடலில் பாரிய அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஆரம்பமாகிய நிலையில், நேற்று ஞாயிற்றுக்கிழமை (10) கொட்டும் மழைக்கு மத்தியில் இரவோடு இரவாக மக்கள் எழுச்சிப் போராட்டம் தொடர்ந்து இடம்பெற்ற நிலையில், இன்று திங்கட்கிழமையும் (11) மக்கள் எழுச்சிப் போராட்டம் இரவோடு இரவாக தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது.

‘பக்க சார்பற்ற மக்கள் போராட்டம்’ என்ற கருப்பொருளில் இந்த ஆர்ப்பாட்டம் பொது மக்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அமைப்புக்கள் அல்லது சங்கங்கள் என எவையும் இன்றி இளைஞர் , யுவதிகளால் சமூக வலைத்தளங்கள் ஊடாக ஏற்பாடு செய்யப்பட்ட இந்த தொடர் ஆர்ப்பாட்டத்தில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்துகொண்டு தங்களது எதிர்ப்பினை வெளிப்படுத்தி வருகின்றனர்.

அத்தோடு, நலன்விரும்பிகளும் குறித்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்து வருபவர்களுக்கு உணவு, மருத்துவ வசதி, கூடாரங்கள், படுக்கைகள் போன்ற பல்வேறு உதவிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றுவருபவர்களுக்கு சமூக ஆர்வலர் ஒருவர் சுமார் 500 மழைக் கவச ஆடைகளை அன்பளிப்பாக வழங்கியுள்ளார்.

அத்தோடு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இளைஞர்களுக்கு உலர் உணவு மற்றும் மருத்துவ உதவிகளும் வழங்கப்பட்டு குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு கூடாரங்கள், தற்காலிக மலசலகூட வசதிகள் போன்றவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும்.