அசைய மறுக்கும் ஆட்சி

325 0

என்னதான் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டங்களைச் செய்தாலும், நாங்கள் அசையமாட்டோம் என்ற நிலைப்பாட்டில், உறுதியாக இருக்கின்றனர் ராஜபக்ஷ சகோதரர்கள்.

தற்போதைய அரசியல், பொருளாதார நெருக்கடிக்கு, ராஜபக்ஷ குடும்பத்தின் மோசமான ஆட்சியே காரணம் என்று குற்றம்சாட்டும் பொதுமக்கள், அவர்களுக்கு எதிராக வீதியில் இறங்கிப் போராட்டங்களை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

இந்தப் போராட்டங்கள் அவர்களை திணறச் செய்திருப்பது உண்மை. இதனைச் சமாளிப்பதற்காக, அரசாங்கத்தில் அங்கம் வகித்த சமல் ராஜபக்ஷ, பஷில் ராஜபக்ஷ, சஷீந்திர ராஜபக்ஷ ஆகியோர், சற்று ஒதுங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனாலும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும் அசைந்து கொடுப்பதாக இல்லை. இந்த இரண்டு பதவிகளில் எதை ஒன்றை விட்டுக் கொடுத்தாலும், அது ராஜபக்ஷவினரின் வரலாற்றுத் தோல்வியாக அமைந்து விடும். அதனால் அவர்கள் இந்தப் பதவிகளை விட்டு விலக மறுக்கிறார்கள்.

இன்னொரு சந்தர்ப்பம் கிடைக்காமல் போகலாம் என்பதாலும், இருக்கின்ற சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதாலும் அவர்கள் இந்த விடயத்தில் உறுதியாக உள்ளனர்.

2015 ஜனாதிபதி தேர்தலில், தோல்வியடைந்து அலரிமாளிகையை விட்டு வெளியேறிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, தங்காலையில் உள்ள கால்ட்டன் இல்லத்தில் தங்கியிருந்தார். அப்போது அவரைத் தேற்றுவதற்காக அவரது இல்லத்தைச் சுற்றி பெருமளவு மக்கள் காணப்பட்டனர்.

இப்போது அதே இல்லத்தை முற்றுகையிட்டு, பதவியில் இருந்து விலகுமாறு அவர்கள் பிரதமரைக் கோருகின்றனர். 2015 ஜனாதிபதி தேர்தல் தோல்விக்குப் பின்னரும், கோட்டாபய ராஜபக்ஷ, மீதான போர் வெற்றி கௌரவம் பறிபோயிருக்கவில்லை.

கோட்டாவின் போர் வெற்றியைக் கொண்டு கட்டியெழுப்பப்பட்ட அரசியல் விம்பம், இன்று தோல்வியைச் சந்தித்து நிற்கிறது. மஹிந்தவும், கோட்டாவும், 2015இற்குப் பின்னர் தவறான முடிவுகளை எடுத்ததால், குடும்ப அதிகாரத்தை நிலைநாட்டும் முனைப்பில் இருந்ததால், இலங்கையின் மீட்பர்களாக அடையாளப்படுத்தப்பட்டு, மீளவும் அரசியலில் இறக்கப்பட்டதால், இன்று நெருக்கடியைச் சந்தித்திருக்கிறார்கள்.

2015 தோல்விக்குப் பின்னர், கௌரவமாக ஒதுங்கியிருந்திருந்தால், சிங்கள மக்கள் மத்தியில் கௌரவமாக மதிக்கப்படும் நிலை காணப்பட்டிருக்கும். இன்று வீட்டுக்குப் போ என்று விரட்டியடிக்காத குறையாக போராட்டங்கள் நடத்தப்படும் நிலை வந்திருக்காது. தேர்தலில் தோற்கடிக்கப்படுவதை விட, மக்களால் வெறுக்கப்பட்டு, வெளியே போ என்று விரட்டப்படுவது அவமானகரமானது. அத்தகையதொரு நிலையை நோக்கியே ராஜபக்ஷவினர் சென்று கொண்டிருக்கிறார்கள்.

ஆனாலும் அவர்கள், தங்களின் அதிகாரப் பிடிமானத்தை தொடர்ந்து தக்கவைப்பதற்கு முனைகிறார்கள். ராஜபக்ஷவினர் ஏன் தோல்வி கண்டார்கள் என்பதை இன்னும் பரலால் நம்ப முடியாதிருக்கிறது. ஏனென்றால், அவர்கள், 2019 ஜனாதிபதி தேர்தலில் 69 இலட்சம் வாக்குகளைப் பெற்றனர்.

>பொதுத்தேர்தலில், மூன்றில் இரண்டுக்கு நெருக்கமான பெரும்பான்மை பலத்தைப் பெற்றனர். சிங்கள மக்களின் அசைக்க முடியாத நம்பிக்கையுடன் ஆட்சிக்கு வந்தவர்கள் இன்று, அவர்களாலேயே விரட்டப்படுகின்ற நிலை தோன்றியிருக்கிறது.

இந்தநிலைக்கு, ராஜபக்ஷவினரின் அணுகுமுறையே காரணம். குறிப்பாக ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஷவைக் களமிறக்கியது தான், இந்த நிலைமைக்கு முக்கியமான காரணம் என்று குமார வெல்கம கூறியிருக்கிறார்.

பிரதேச சபை உறுப்பினராக இருந்த அனுபவத்தைக் கூட கொண்டிராதவரை, ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்துவதா என்று அவர் தான் முதலில் கட்சிக்குள் போர்க்கொடி எழுப்பினார்.

ராஜபக்ஷ குடும்பத்தின் மீதான விசுவாசமும், மீண்டும் அதிகாரத்தைப் பெற்று விடுவதற்கு அதுமட்டும் தான் ஒரே வழி என்றும் கருதியதால், கோட்டாபய ராஜபக்ஷவை நிறுத்துவதற்கு எதிராக வேறெவரும் வாய்திறக்கவில்லை. அந்த இடத்தில் குமார வெல்கம மட்டும் தனியனாக நின்றார், சந்திரிகாவின் ஆதரவு இருந்ததால், அவர் அரசியலில் தப்பிப் பிழைத்து, எதிர்க்கட்சியின் மூலம் பாராளுமன்றத்துக்குச் சென்றார்.

இப்போது, அவர் கோட்டாபய ராஜபக்ஷவை தெரிவு செய்தது தான் பிரச்சினைகளுக்கு மூல காரணம் என்றும் குற்றம்சாட்டுகிறார்.

இராணுவ அதிகாரத்தை வைத்துக் கொண்டு எல்லாவற்றையும் சாதித்து விடலாம் என்ற கோட்டாபய ராஜபக்ஷவின் கணிப்பை பொய்யாகியுள்ளது தற்போதைய நிலைமைகள்.

அவர் மீதும், மஹிந்த ராஜபக்ஷ மீதும் சிங்கள மக்கள் வைத்த அபார நம்பிக்கை சிதைக்கப்பட்டமைக்குப் பின்னால், உள்ள காரணமே இந்த இரண்டு விடயங்களும் தான்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவிக்கு வந்த பின்னர், அரசாங்கத்தில் எத்தனை அமைச்சரவை மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன? அமைச்சர்கள், அமைச்சுக்களின் செயலாளர்கள், மத்திய வங்கி ஆளுநர்கள், அரச நிறுவனங்களின் தலைவர்கள், என்று மாறி மாறி பதவிக்கு வருவதும் வெளியே போவதுமாகத் தான் இருந்தார்கள்.

 

நிலைத்திருக்க கூடிய- தகைமைவாய்ந்த- பொருத்தமான அதிகாரிகளையும், அமைச்சர்களையும் தெரிவு செய்வதில் அவர் தோல்வியைச் சந்தித்திருக்கிறார்.

இல்லையேல், கடந்த வாரம் நிதியமைச்சராக பதவியேற்ற அலி சப்ரி 24 மணிநேரத்துக்குள் பதவி விலகும் நிலை ஏற்பட்டிருக்காது.

இராஜாங்க அமைச்சராக பதவியில் இருந்த அஜித் நிவாட் கப்ரால், மத்திய வங்கி ஆளுநர் ஆக்கப்பட்டு, இப்போது இரண்டு பதவிகளையும் இழந்து திரிசங்கு நிலையில் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்காது.

முக்கிய பல அரச நிறுவனங்களைப் பொறுப்பேற்ற திறமையான அதிகாரிகள் பலர் அரசியல்வாதிகளின் தலையீடுகளை பொறுக்க முடியாமல், அரசாங்கத்தின் செயற்பாடுகளை ஏற்றுக்கொள்ள முடியாமல், பதவி விலகிச் செல்லும் நிலை தோன்றியிருக்காது.

>ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு நிர்வாகத் திறன் இருக்கவில்லை. நிர்வாகத்தை நடத்தும் பாங்கும் தெரியவில்லை. இவ்வாறானவர்கள், தமக்கு சிறந்த ஆலோசகர்களை வைத்திருக்க வேண்டும் என்று அவர் சிந்திக்க கூட தயாரில்லை.

ஆனால், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு பின்னால் உருவாக்கப்பட்ட ஒரு மெய்யற்ற விம்பம், அத்தகைய ஆலோசனைகளை செவிமடுக்கும் நிலைக்கு தடையாக இருந்தது.

இதனால் எடுக்கப்பட்ட ஒவ்வொரு முடிவும் தவறாக அமைய, அதனை திருத்துவதற்குப் பதிலாக, மீண்டும் மீண்டும் தவறான முடிவுகளே எடுக்கப்பட்டன.

கடந்த சில வாரங்களாக அரசாங்க நிர்வாகம் தொடர்பாக எடுக்கப்பட்ட பல முடிவுகள், மாற்றப்பட்டதே, மிகவும் மோசமான நிர்வாகத் திறனுக்கு எடுத்துக்காட்டு.

இவ்வாறான நிலை தோற்றம் பெற்றதற்கு முக்கியமான காரணம், இராணுவ மயப்படுத்தப்பட்ட அரச நிர்வாகம். கோட்டாபய ராஜபக்ஷ பதவிக்கு வந்த காலத்தில் இருந்து, தன்னைச் சுற்றி நம்பகமான ஆலோசகர்களை வைத்திருப்பதற்குப் பதிலாக நம்பகமான இராணுவ சகபாடிகளை வைத்திருப்பதில் தான் முனைப்பாக இருந்தார்.
தனக்கென தனியான அரசியல் பின்பலத்தைக் கொண்டிராத அவர், இராணுவ சகபாடிகளைக் கொண்டு அரணமைக்க முயன்றார். அதற்காக அமைச்சுக்களின் செயலாளர்கள் தொடக்கம், அரச நிர்வாகத்தில் பல்வேறு முக்கிய பதவிகளையும் அவர்களுக்கு வழங்கினார்.

அதனால் அரசியல்வாதிகளும் நெருக்கடியைச் சந்தித்தனர். அரச அதிகாரிகளும் வெறுப்படைந்தனர். தங்களை மேவி ஜனாதிபதியின் இராணுவ சகபாடிகள் அதிகாரம் செலுத்துவதை அவர்கள் நீண்டகாலம் சகித்துக் கொள்ளக் கூடிய நிலை இருக்கவில்லை.

அரச நிர்வாகம் குழப்பமடைந்து போனதற்கு இதுவும் ஒரு காரணம். பல அமைச்சுக்களில், அமைச்சர்களுக்குத் தெரியாமல் பல முடிவுகள் எடுக்கப்பட்டன. பலருக்கு என்ன நடக்கிறது என்றே தெரிவதில்லை.

இவ்வாறான குழப்பங்களின் நீட்சி தான் நாட்டைப் படுகுழிக்குள் – பாதாளத்துக்குள் தள்ளியது. கொரோனா, மற்றும் சர்வதேச நிலவரங்கள், போருக்காகப் பெறப்பட்ட கடன்கள் மாத்திரம் நாட்டை வங்குரோத்து நிலைக்குத் தள்ளவில்லை.

அரசின் தவறான முடிவுகளும், திறமையற்ற செயற்பாடுகளும், கூட இந்த நிலைக்கு காரணம் தான். இதற்கான முழுப்பொறுப்பும் ராஜபக்ஷவினரையே சாரும்

சத்ரியன்