சென்ட்ரல், எழும்பூர் ரெயில் நிலையங்களில் வாகன பார்க்கிங் பகுதியில் வெயிலால் வாகனங்கள் பாதிக்கபடாமல் இருக்க நிழற்கூரைகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ரெயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
எழும்பூர், சென்ட்ரல், ரெயில் நிலையங்களில் வெயிலால் இருசக்கர வாகனங்கள் பாதிக்கப்பட்டு வருகின்றன
சென்னையில் எழும்பூர், சென்ட்ரல் ரெயில் நிலையங்களுக்கு தினமும் பல லட்சம் பயணிகள் வந்து செல்கிறார்கள். இங்குள்ள ரெயில் நிலைய வளாகத்தில் கட்டண வாகன நிறுத்தம் செயல்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் இங்குள்ள வாகன நிறுத்துமிடங்களில் பயணிகள் தங்களது வாகனங்களை கட்டணம் செலுத்தி நிறுத்தி வருகிறார்கள். ஆனால் வாகனங்களுக்கு எந்தவித பாதுகாப்பும், பராமரிப்பும் இல்லை.இதனால வெயில், மழையால் வாகனங்கள் பாதிக்கப்பட்டு வருகின்றன.
சென்ட்ரல், எழும்பூர் ரெயில் நிலையங்களில் வாகன பார்க்கிங் பகுதியில் வெயிலால் வாகனங்கள் பாதிக்கபடாமல் இருக்க நிழற்கூரைகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ரெயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து பயணி ஒருவர் கூறியதாவது:-
எழும்பூர், சென்ட்ரல் ரெயில் நிலையங்களை தினமும் ஏராளமான பயணிகள் பயன்படுத்தி வருகின்றனர். ஊரடங்கு தளர்த்தப்பட்டு அனைத்து ரெயில்களும் இயக்கப்பட்டு வருகிறது. எழும்பூர், சென்ட்ரல் ரெயில் நிலையங்களில் இருந்து தினமும் 3 லட்சம் பயணிகள் வெளியூர்களுக்கு பயணம் செய்கின்றனர்.
ஆனால் 2 பெரிய ரெயில் நிலையங்களிலும் உள்ள வாகன பார்க்கிங் பகுதியில் எந்த வித அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை. இதனால் வாகனங்கள் வெயில், மழையால் பாதிக்கப்பட்டு வருகின்றன. எனவே நிழற்கூரைகள் அமைத்து வாகனங்களை பாதுகாக்க வேண்டும்.
இருசக்கர வாகனங்களில் ரெயில் நிலையங்களுக்கு வரும் பயணிகள், அடிப்படை வசதி இல்லாமல் வேதனை அடைந்து வருகின்றனர். குறிப்பாக, வெளியூருக்கு செல்பவர்கள், எந்தவித பாதுகாப்பும் இன்றி தங்களது இருசக்கர வாகனங்களை நிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
எழும்பூர், சென்ட்ரல் ரெயில் நிலையங்களில் உடனடியாக வாகன நிறுத்த வசதிகளை மேம்படுத்தி வெயில், மழையில் இருந்து வாகனங்களை பாதுகாக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

