ஜனாதிபதிக்கு எதிராக குற்றப்பிரேரணை தயார் – ஹர்ஷன ராஜகருணா

261 0

நாட்டு மக்களின் ஆணையை அரசாங்கம் செவிமடுக்காது அரசாங்கம் தொடர்ந்தும் செயற்படுமாயின் அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையும், ஜனாதிபதிக்கு எதிராக குற்றப் பிரேரணையும் கொண்டுவர எதிர்க்கட்சி தயாராக உள்ளதாக எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா சபையில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில்  வெள்ளிக்கிழமை, சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கை தொடர்பான அறிக்கை மீதான  சபை ஒத்திவைப்பு வேளை  பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

ஜனாதிபதியை பதவி நீக்க வேண்டும் என்பதே மக்களின் நிலைப்பாடாகும், அதேபோல் அரசாங்கத்தின் மீதும் மக்கள் நம்பிக்கையிழந்துள்ளனர்.

ஆகவே அரசாங்கம் இனியும் மக்களின் கருத்திற்கு செவி மடுக்காது செயற்பட்டால் அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையும், ஜனாதிபதிக்கு எதிராக குற்றப்பிரேரணையும் கொண்டுவர தயாராகவே உள்ளோம். இந்த நாட்டு மக்களுடன் நீங்கள் உள்ளீர்கள் என்றால் இரண்டுக்கும் கைதூக்கியாக வேண்டும்.

இல்லையேல் நீங்கள் மக்களிடம் செல்ல முடியாது. எனவே சகல உறுப்பினர்களும் நாட்டுக்காக இந்த பிரேரணையில் கையொப்பமிடுங்கள். நாட்டுக்காக இந்த அரசாங்கத்தை விரட்டியடிக்க மக்களுடன் நில்லுங்கள் எனவும் அவர் சபையில் தெரிவித்தார்.