இலங்கையின் நெருக்கடி நிலையை சமாளிக்க வழி கூறிய புதிய மத்திய வங்கி ஆளுநர்

264 0

இலங்கையின் நெருக்கடி நிலையை சமாளிக்க புதிய மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க வழி ஒன்றை கூறியுள்ளார்.

அதற்கமைய இலங்கை மத்திய வங்கியை சுயாதீனமாக செயற்பட அனுமதிப்பதே தற்போதைய நெருக்கடி நிலைமையை சமாளிப்பதற்கான ஒரு வழி என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கை மத்திய வங்கியின் 17வது ஆளுநராக நந்தலால் வீரசிங்க இன்று கடமைகளைப் பொறுப்பேற்றார். இதன் போது கருத்து வெளியிடும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் பொருளாதாரத்தை திட்டவட்டமான திசையில் வழிநடத்தும் ஆற்றலும் பலமும் இலங்கை மத்திய வங்கிக்கு இருப்பதாக தான் நம்புவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த சில மாதங்களில் திருப்புமுனையை எட்ட முடியும். அதற்கு அரசியல் ஸ்திரத்தன்மையும் சமூக ஸ்திரத்தன்மையும் அவசியம் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

நாட்டின் முன்னேற்றத்திற்காக தாம் அதிகபட்ச அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகவும், தனது விவகாரங்களில் அரசியல் தலையீடுகளுக்கு இடமளிக்காமல் சுதந்திரமாக செயற்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அந்தப் பணியை முன்னெடுப்பதற்குத் தேவையான பின்னணியைத் தயாரித்து இந்த அபாயத்தை ஏற்று இந்த நாட்டுக்கு வந்ததாக அவர் கூறியுள்ளார்.

நாட்டின் கடனை மறுசீரமைக்க கூடிய நடவடிக்கைகள் விரைவில் எடுக்கப்படும் எனவும், உடனடியாக யோசனைகளை கோருவதற்கு ஏற்கனவே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

யோசனைகளை பரிசீலித்து அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கு உடனடியாக குழுவொன்றை நியமிக்க உத்தேசித்துள்ளதாக வீரசிங்க தெரிவித்தார்.

நாட்டின் சார்பாக தீர்மானங்களை எடுப்பதில் எந்தவொரு அரசியல் அதிகாரத்தினாலோ அல்லது அரசியல் உள்நோக்கத்திலோ செயற்படும் எண்ணம் தமக்கு இல்லை எனவும் இலங்கை மத்திய வங்கி இந்த நாட்டு மக்களுக்கு நேரடியாக பொறுப்புக்கூற வேண்டியுள்ளது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.